அதி தீவிர புயலாக மாறியது 'டாக்டே'- 18ல் குஜராத்தில் கரையை கடக்கிறது

தினமலர்  தினமலர்
அதி தீவிர புயலாக மாறியது டாக்டே 18ல் குஜராத்தில் கரையை கடக்கிறது

புதுடில்லி :'அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிதீவிர புயலாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, குஜராத்தில் நாளை மறுதினம் கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் மாறியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு, 'டவ்டே' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: டவ்டே புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, அதிதீவிர புயலாக மாறும். இந்தபுயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, குஜராத் மாநிலம் போர்பந்தர் - நலியா இடையே 18ம் தேதி கரையை கடக்கும்.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 - 175 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா ஆகிய ஆறு மாநிலங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்புக்கு ஆளாகும் மாநிலங்களுக்கு, 42 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



குமரியில் கொட்டும் மழை :கடல் சீற்றத்தால் மக்கள் அச்சம்



'டவ்டே' புயல் காரணமாக, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் நேற்றும் பலத்த மழை தொடர்ந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மண்ணில் சாய்ந்தன. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், 9.8 செ.மீ., மழை பெய்துள்ளது.தக்கலையில் அதிகபட்சமாக 8.7 செ.மீ., மழை பதிவானது. 48 அடி உயரமுள்ள பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம், 43 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேங்காப்பட்டணம் உள்ளிட்ட மேற்கு கடலோர பகுதிகளில், அதிக கடல் சீற்றம் காணப்படுகிறது. கடல் நீர் ஊருக்குள் புகுந்து வருவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். இதற்கிடையில் தென்மேற்கு பருவ மழை, இந்த மாத இறுதியில் ஆரம்பித்து விடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குழந்தை உட்பட இருவர் பலி



கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே காரோட்டை சேர்ந்தவர் யஜின், 36. இவர் கூலி வேலை செய்து, திருவனந்தபுரத்தில் சட்டக்கல்லுாரியில் படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்த போது, பெய்த பலத்த மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுக்குள் சிக்கி இறந்தார். ராமன்துறையைச் சேர்ந்தவர் பெட்மின். இவரது மகள் ரெஜினாள், 2. நேற்று முன்தினம் இரவு வீட்டின் மேற்கூரை பலத்த காற்றில் உடைந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தை இறந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரளாவில் பலத்த மழை



கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளிலும், வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. வலியதுராவில், 200 மீட்டர் நீளமுள்ள பழமை வாய்ந்த கடல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மழை தொடரும் என்பதால் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒன்பது மீனவர்கள் மாயம்



நாகப்பட்டினம்: தமிழக கடல் பரப்பில் மீன்வளத்தை பெருக்க தடைக்காலம் அமலில் உள்ளபோது, தமிழக மீனவர்கள், கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் தங்கி மீன்பிடிக்க செல்வர்.அதன்படி, நாகை மாவட்டம், சாமந்தான் பேட்டையைச் சேர்ந்த இடும்பன், 55, என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அவரது மகன்கள் மணிவேல், 26, மணிகண்டன், 23, உட்பட ஒன்பது மீனவர்கள் கடந்த மாதம், 29ம் தேதி, கொச்சி துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று அதிகாலை கொச்சியில் இருந்து, 300 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அரபிக்கடலில் உருவான, 'டவ்டே' புயலில், நாகை மீனவர்கள் படகு சிக்கி கடலில் மூழ்கியது. படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. மற்ற படகில் இருந்த மீனவர்கள் நாகை மீனவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். மாயமான மீனவர்களை மீட்டு தர வலியுறுத்தி, கலெக்டர் மற்றும் மீன்வளத் துறை இணை இயக்குனரிடம் மனு அளித்தனர்.



மூலக்கதை