அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி

அ.தி.மு.க.,வில், 'தோல்விக்கான காரணங்களை ஆராய, மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்' என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., திடீர் போர்க்கொடி துாக்கி உள்ளார். அக்குழு அறிக்கையை செயற்குழுவில் விவாதித்து, தோல்வி ஏற்படுத்திய மாவட்ட செயலர்களை களையெடுக்கவும் நிபந்தனை விதித்துள்ளார்.

இது தொடர்பாக,இ.பி.எஸ்.,சுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, தோல்வி அடைந்த வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தவும், ஓ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 177 தொகுதிகளில், 66 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தேர்தலில் முன்னாள்எம்.எல்.ஏ.,க்கள் 45 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டது.



குளறுபடிகள்



மாவட்ட செயலர்கள் பரிந்துரையில், தலா ஒரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். மாவட்ட செயலரும், அவருடைய வேட்பாளரும் வெற்றி பெற்றாலே, ஆட்சி அமைத்து விடலாம் என அ.தி.மு.க., தலைமை கணக்கு போட்டது.ஆனால் வேட்பாளர்கள் தேர்விலும், தேர்தல் செலவுக்கு பணம் வழங்கியதிலும் நடந்த குளறுபடிகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன. ஜெயலலிதா தலைமையில் சந்தித்த தேர்தல்களில், வேட்பாளர்களிடம் நேரடியாக பணம் வழங்காமல், குழு அமைத்து அவர்கள் வாயிலாக செலவு செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் நேரடியாக வழங்கப்பட்டதும், செலவு செய்தனரா என்பதை கண்காணிக்க பொறுப்பாளர்களை நியமிக்காமல் விட்டதும், தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக, தங்கள் மாவட்டத்தில் எதிர்கோஷ்டியினர் வெற்றி பெறக்கூடாது என்பதில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கவனமாக இருந்துள்ளனர்.அந்த வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்துள்ளனர். தி.மு.க., புள்ளிகளிடம் திரைமறைவில் தொடர்பு வைத்து, தங்களது எதிர் கோஷ்டியினர் ஜெயிக்க விடாமல் தடுக்கும் வேலையையும் பார்த்துள்ளனர்.

விசாரணை



இது தொடர்பான புகார் மனுக்கள், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளன.அதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆராய மூத்த நிர்வாகிகள் பொன்னையன், செம்மலை, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து, வேட்பாளர்களிடமும், மாவட்ட செயலர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். அக்குழு தரும் அறிக்கையை செயற்குழு கூட்டத்தில் விவாதித்து, தோல்விக்கு காரணமான நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்காமல், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பணியாற்றிய சில மாவட்ட செயலர்களை மாற்ற வேண்டும் என இ.பி.எஸ்.,சிடம், ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். ஆனால், மாவட்ட செயலர்கள் பலர், இ.பி.எஸ்., ஆதரவாளர்களாக இருப்பதால் அவர் தயக்கம் காட்டுகிறார்.

இதையடுத்து அவருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, தோல்வி அடைந்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட செயலர்களை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்த, ஓ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். அதன்பின் இந்த விவகாரம், கட்சியில் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரம் குவிப்பு: தோல்விக்கு காரணம்!



அ.தி.மு.க., தோல்விக்கு, நான்கைந்து பதவிகள் ஒருவரிடமே குவிந்திருப்பதும் முக்கிய காரணமாகி விட்டது. முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நிலைய செயலர், சேலம் புறநகர் மாவட்ட செயலர் ஆகிய பதவிகள் உள்ளன.தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து அவருக்கு கிடைத்திருப்பதால், இனி அவர் சிறிய பதவிகளை வகிக்கக் கூடாது என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.ஓ.பி.எஸ்.,சிடம், கட்சி ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என, இரு பதவிகள் உள்ளன. வைத்தி லிங்கத்திடம், துணை ஒருங்கிணைப்பாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலர், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவிகள் உள்ளன.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு, வழிகாட்டுதல் குழு உறுப்பினர், அமைப்பு செயலர், மாவட்ட செயலர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் சில முன்னாள் அமைச்சர்களும், அமைப்பு செயலர், மாவட்ட செயலர் பதவிகளை தன் வசம் வைத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு பதவி வழங்கி மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் போது, கட்சி பலம் அடையும். அதற்கு மாறாக, ஒருவரே நான்கைந்து பதவிகள் வகிப்பதும், மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுப்பதும் தான், கட்சி பலவீனமடைய காரணம் என்கிறது கட்சி வட்டாரம்.- நமது நிருபர் -

மூலக்கதை