கொரோனாவால் ஒரே நாளில் 3,890 பேர் பலி: இந்தியாவின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் ஒரே நாளில் 3,890 பேர் பலி: இந்தியாவின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் வேதனை தெரிவித்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 3,890 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகக் கொடூரமாக உள்ளது. உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு கடுமையாக உள்ளது. கடந்த 3 மாதமாக பாதிப்பின் தீவிரம் குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 3,890 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 207 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது மட்டும் ஆறுதலான விஷயமாக உள்ளது. தற்போது 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தநிலையில், கொரோனா 2வது அலையில் இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. பல மாநிலங்களில் கவலைக்குரிய அளவில் வைரஸ் தொற்று அதிகரிப்பும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உள்ளன. இந்த இக்கட்டான நிலையில், இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்கான டெண்டுகள், முகக்கவசங்கள், பிற மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ளது. கொரோனா முதல் அலையைவிட, 2வது அலை மோசமானதாக இருக்கும்’’ என்றும் கூறியுள்ளார். அதே போல, இந்தியாவில் உருவான இரட்டை உருமாற்ற வகை கொரோனா வைரசால் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.  ‘‘இந்தியாவின் உருமாறிய கொரோனா நாட்டின் செயல்பாடுகளில் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். நாம் அதனுடன் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும்’’ என்றும் அவர் கூறி உள்ளார்.டெல்லியில் பாதிப்பு 11 சதவீதமாக சரிந்ததுகடந்த மாதம் டெல்லியில் மிகக் கடுமையாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அங்கு கொரோனா பாசிடிவ் விகிதம் 11 சதவீதமாக சரிந்துள்ளதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் அங்கு 6,500 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.141 பேர் உள்ள கிராமத்தில்51 பேருக்கு தொற்றுகொரோனா 2வது அலை கிராமங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒடிசாவில் மிகப்பழமையான மலைவாழ் இனத்தை சேர்ந்த 21 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதே போல உத்தரகாண்ட்டில் குர்கயால் எனும் கிராமத்தில் 141 மட்டுமே வசிக்கும் நிலையில் அதில் 51 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கிராமத்தில் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை