விண்வெளி ஆய்வில் புதிய சாதனை: செவ்வாயில் வெற்றிகரமாகதரையிறங்கிய சீன விண்கலம்

தினகரன்  தினகரன்
விண்வெளி ஆய்வில் புதிய சாதனை: செவ்வாயில் வெற்றிகரமாகதரையிறங்கிய சீன விண்கலம்

பீஜிங்: சீனா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு செவ்வாயில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 3வது நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாங்மார்ச் 5 ராக்கெட் மூலம் தியான்வென்-1 விண்கலத்தை ஏவியது. பூமியிலிருந்து 4 கோடி கிமீ தொலைவுக்கு சுமார் 7 மாதங்கள் பயணித்த இந்த விண்கலம் கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கோள் வட்டப்பாதைக்குள் நுழைந்தது. இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சீன நேரப்படி நேற்று காலை 7.18 மணி அளவில் தியான்வென்-1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனை சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் சீன விண்கலம் இது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரை இறக்கிய 3வது என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாயில் விண்கலத்தை தரை இறக்கி உள்ளன. இது விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.சீன விண்கலத்தின் லேண்டர் தற்போது வெற்றிகரமாக தரை இறங்கிய நிலையில், அதில், ஜூரோங்க் ரோவர் கீழே இறங்க தயார் நிலையில் உள்ளது. இது ஒரு சில நாட்கள் ஆய்வுக்குப் பிறகு சிறிய பாலம் போன்ற இறக்கத்தின் மூலமாக செவ்வாயில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும். இந்த ரோவருக்கு சீனாவில் நெருப்புக் கடவுளாக வழிபடும் ஜீரோங்க் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.ஜூரோங்க் ரோவர் 6 சக்கரங்களைக் கொண்டதாகவும், 4 சோலார் பேனல், 6 அறிவியல் தொடர்பான கருவிகள் கொண்டதாக உள்ளது. இது 240 கிலோ எடை கொண்டது. இந்த ரோவர் 3 மாதங்கள் செவ்வாய்கிரகத்தில் இருந்து செவ்வாய்கிரகத்தின் நிலம், மண், சுற்றுச்சூழல், நீர், வளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். மேலும், செவ்வாய் கிரகத்தின் கற்களின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக சேகரிக்கும். இந்த வெற்றியைத் தொடர்ந்து சீன ஆராய்ச்சியாளர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திக் திக் 7 நிமிடம்ரோவரை தரை இறக்கும் 7 நிமிடங்கள் மிக மிக சிரமமானது. ஏனெனில் செவ்வாயில் இருந்து பூமிக்கு பெறப்படும் ரேடியோ சிக்னல்கள் மிக வேகமாக இருக்கும் என்பதால் ரோவரை சரியாக தரை இறக்குவது சவாலானது. இதை சீனா முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செய்துள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா அனுப்பி ரோவர்கள் செவ்வாயில் தரை இறங்கும் போது தோல்வி அடைந்துள்ளன. நாசா வாழ்த்துஅமெரிக்காவின் நாசா சமீபத்தில் பெர்சோவன்ஸ் விண்கலத்தை செவ்வாயில் தரை இறக்கி ஆய்வு செய்கிறது. அதில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது. தற்போது சீன விண்கலம் செவ்வாயில் தரை இறங்கியதைத் தொடர்ந்து நாசாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.* அமெரிக்காவும், ரஷ்யாவும் கடந்த 1960ம் ஆண்டு முதல் செவ்வாயில் கால் பதிக்க முயற்சிகள் மேற்கொண்டன.* பலமுறை தோல்வி அடைந்த பிறகு ரஷ்யா 1971ம் ஆண்டு ரோவரை வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறக்கியது.* அதைத் தொடர்ந்து அமெரிக்கா 1975ம் ஆண்டு ரோவரை இறக்கி ஆய்வை தொடங்கியது.* அதன்பின் 3வது நாடாக சீனா விண்கலத்தை தரை இறக்கி உள்ளது. இந்த முயற்சியில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தோல்வி அடைந்துள்ளன.

மூலக்கதை