தடை முடிந்து நாடு திரும்பிய ஆஸி., மக்கள்

தினமலர்  தினமலர்
தடை முடிந்து நாடு திரும்பிய ஆஸி., மக்கள்

மெல்போர்ன்:இந்தியாவுக்கு பயணியர்விமானங்கள் இயக்க ஆஸ்திரேலியா விதித்த 15 நாள் தடை முடிவுக்கு வந்தது. தடைக்குப் பின் இயக்கப்பட்ட முதல் விமானத்தில், 80 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பினர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேலானோர் இந்தியாவில் வசிக்கின்றனர். இங்கு கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்ததால், இரு நாடுகளுக்கு இடையிலான பயணியர் விமான சேவைகளை, 15 நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியா தடை செய்தது.

இந்தியாவில் உள்ள தங்கள் குடிமக்கள் நாடு திரும்ப தடை விதித்த ஆஸ்திரேலிய அரசு, அதை மீறுவோருக்கு, ஐந்து ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்தது.இந்த தடைக் காலம் முடிந்ததால் ஆஸ்திரேலியர்களுக்கான முதல் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இயக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப முடிவு செய்து உள்ளனர் என்றாலும், உடல்நலன் மற்றும் பொருளாதார நிலை கருதி, முதற்கட்டமாக, 1,000 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.இவர்களில் 150 பேர், முதல் விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தது. சமீபத்தில் அவர்களுக்கு கொரோனா கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் பலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது.

மேலும் சிலர், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.அவர்கள் நாடு திரும்ப, ஆஸ்திரேலிய அரசு அனுமதி மறுத்ததால், 80 பயணியருடன் நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம், ஆஸ்திரேலியாவின் டார்வினில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று தரை இறங்கியது.

பயணியர் அனைவரும்,அங்குள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்திரேலியர்களுக்கான அடுத்த விமானம், ஒரு வாரத்தில் புறப்படும் என, துாதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மூலக்கதை