பைடன் ஆலோசகராக நீரா டாண்டன் நியமனம்

தினமலர்  தினமலர்
பைடன் ஆலோசகராக நீரா டாண்டன் நியமனம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன், 50, நியமிக்கப்பட்டுள்ளார்.சட்ட வல்லுனரான நீரா தாண்டன், பில் கிளிண்டன் ஆட்சியின்போது, அமெரிக்க அரசின் கொள்கை பிரிவு துணை இயக்குனராக பணியை துவக்கினார்.

அதன்பின், ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவின் கொள்கை இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஒபாமாவின் காப்பீட்டு சட்ட கொள்கை உருவாக்கத்தில், இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போது அமெரிக்க மேம்பாட்டு மையத்தின் தலைவராக உள்ள நீரா டாண்டன், சமூக ஊடகங்களில் வெளிப்படையாக கருத்துகளை கூறி, அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இவர் சார்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் குறித்தும், கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு உள்ளார். அதனால், இரு மாதங்களுக்கு முன், அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் துறை இயக்குனராக, நீரா டாண்டன் நியமிக்கப்பட்டதற்கு, குடியரசு கட்சியினருடன், அவர் சார்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் நீரா டாண்டன் பதவி ஏற்க முடியாமல் போனது. இந்நிலையில், ஜோ பைடன் தன் தலைமை ஆலோசகராக, நீரா டாண்டனை நியமித்து உள்ளார். 'அதிபருக்கு, 'டிஜிட்டல்' சேவைகள் மற்றும் அனைவருக்குமான காப்பீடு ஆகிய இரு முக்கிய துறைகளில், நீரா டாண்டன் ஆலோசனை வழங்குவார்' என, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை