வங்கி கடன் சீரமைப்பு வசதியை நாடுவது ஏற்றதா?

தினமலர்  தினமலர்
வங்கி கடன் சீரமைப்பு வசதியை நாடுவது ஏற்றதா?

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக, பலரும் பொருளாதார நோக்கில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வங்கிகள் கடன் சீரமைப்பு வசதியை அளிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், இந்த சீரமைப்பு வசதியை நாடலாம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு நடுவே, தவணை தள்ளுபடி மற்றும் அதன் பிறகு கடன் சீரமைப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டன. தற்போது மீண்டும் கடன் சீரமைப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் மற்றும் இதன் தாக்கத்தை அறிந்து செயல்படுவது அவசியம்.


நிபந்தனைகள் உண்டு:


மார்ச் மாத இறுதி வரை வழக்கமான கணக்காக கருதப்படும் கடன் கணக்குகள் இந்த வசதியை நாடலாம். செப்டம்பர் மாத இறுதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். அதன் பின், வங்கி இது குறித்து பரிசீலித்து தீர்மானிக்கும். இதற்கான நெறிமுறைகள், நிபந்தனைகளை வங்கி தெளிவாக குறிப்பிட வேண்டும்.


வங்கி முடிவு:


கடன் சீரமைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இதை ஏற்பதும், நிராகரிப்பதும் வங்கியின் முடிவு என்பதை உணர வேண்டும். சீரமைப்பு வங்கி அனுமதிக்கலாம் என்று மட்டுமே ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எனவே, சீரமைப்பு கோரிக்கையை ஏற்பது, வங்கி முடிவின் அடிப்படையிலேயே அமையும்.


விளைவுகள் உண்டு:


சீரமைப்பு கோரிக்கையை வங்கி ஏற்றுக்கொண்டு, கடனுக்கான காலத்தை நீட்டிப்பது உள்ளிட்ட மாற்றங்களை செய்தாலும், நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப வட்டி கூடுதலாக அமையும். இதனால், சுமை அதிகரிக்கவே செய்யும். மேலும், கடன் சீரமைப்புக்கு கட்டணமும் இருக்கலாம்.


தற்காலிக தீர்வு:


பொதுவாக சீரமைப்பு கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவது உண்டு. அந்த வகையில், கடன் சீரமைப்பு தற்காலிக நிவாரணமாக அமைந்தாலும், ஒட்டுமொத்த நோக்கில் கூடுதல் சுமையாகவே அமையும். எனவே, வேறு வழியில்லாத நிலையில் கடைசி வாய்ப்பாக சீரமைப்பை நாட வேண்டும்.


கிரெடிட் ஸ்கோர்:


கடன் சீரமைப்பை நாடுவது, கடன் தகுதியை தீர்மானிக்க உதவும் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சீரமைப்பு கோரிக்கையை, வங்கிகள் கடன் தகுதி நிறுவனங்களுக்கு தெரிவிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்றிருந்தால், மற்ற கடன்களையும் இது பாதிக்கும்.

மூலக்கதை