மூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது! சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்

தினகரன்  தினகரன்
மூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது! சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்

மும்பை: கொரோனாவின் மூன்றாவது அலையானது குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை, கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது. இது, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும்படி உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், இறந்தவர்களும் அதிகமுள்ள மாநிலம் மகாராஷ்டிராதான். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என்று எந்த அலையாக இருந்தாலும், முதன்முதலாக பாதிக்கப்பட்டது மகாராஷ்டிராதான். புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மகாராஷ்டிராவில் மட்டும் 50 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். ஆயினும்கூட, முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் கொரோனாவை மகாராஷ்டிரா அரச திட்டமிட்டு எதிர்கொண்டதால், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் குளறுபடிகள் நடைபெறவில்லை. அதேசமயம் மிக அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது அலை எழுவதற்கு முன்பாகவே தன்னை தயார்படுத்தி வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்கள் மகாராஷ்டிராவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும்நிலையில், மும்பை உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் விநியோக முறையை உச்ச நீதிமன்றமே பாராட்டியுள்ளது. இதற்கிடையே மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற மகாராஷ்டிரா அரசு பெரிய திட்டங்களை வகுத்து வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அதனை தடுப்பதற்காக குழந்தைகளுக்கான குழந்தை கோவிட் பராமரிப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. மும்பையின் கோரேகானில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் குழந்தைகளுக்கான கோவிட் பராமரிப்பு வார்டு உருவாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 700 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நான்கு ஆக்சிஜன் ஆலைகள் மற்றும் ரெம்டெசிவர் வழங்கும் வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னையை பொருத்தமட்டில், ஆரம்பத்தில் பி.எஸ்.ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரே ஒரு ஆக்சிஜன் ஆலை கஸ்தூரிபா மருத்துவமனையில் நிறுவப்பட்டது. தற்போது, மற்ற 12 இடங்களில் 45 மெட்ரிக் டன் கொள்ளளவு ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. மும்பையில் உள்ள வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து தினமும் 235 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மாநில அரசு பெறுகிறது. ஒவ்வொரு நாளும் 1700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா அரசு தினமும் 1200 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களிலிருந்து பெறுகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை தினமும் 3000 மெட்ரிக் டன் அளவிற்கு கொண்டு செல்ல ‘மிஷன் ஆக்சிஜன்’ திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தி வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகிறார். ஆக்சிஜன் பிரச்னை ஒருபக்கம் தீர்க்கப்படும் நிலையில், அதே வேகத்தில் தடுப்பூசி போடும் பணியையும் மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1.65 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. மேலும் 12 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய மகாராஷ்டிரா அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் பாடம் கற்றுக் கொண்ட மகாராஷ்டிரா அரசு, தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையைச் சமாளிக்க தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை