ஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்

தினகரன்  தினகரன்
ஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்

விஜயவாடா: கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் ேடங்கர் லாரியுடன் டிரைவர் தாபாவில் தூங்கியதால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஆந்திரா போலீசாரின் உதவியுடன் லாரியை மீட்டு நோயாளிகளை காப்பாற்றினர். நாடு முழுவதும் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஆக்சிஜன் உதவியில் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளும், மருத்துவர்களும் நோயாளிகளைக் காப்பாற்ற விரும்புகிறார்கள்; ஆனால் போதுமான ஆக்சிஜன் இருப்பு இல்லை. அதனால், பக்கத்து மாநிலங்களின் உதவியை கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநிலங்கள் தள்ளப்படுகின்றன. அவசர சேவை என்பதால் ஆக்சிஜனைக் கொண்டு செல்வோருக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. ரயில்களில் வந்து சேரும் திரவ ஆக்சிஜன், குறிப்பிட்ட மாநில தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. அந்த லாரிகளை டிரைவர்கள் 24 மணி நேரமும் இடைவிடாது இயக்க வேண்டியுள்ளதால், ஓய்வெடுக்க நேரம், இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. சமீபத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்துள்ளது. விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் சுமார் 400 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ஒடிசாவின் அங்கூலில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ஆக்சிஜன் டேங்கர்  லாரி ஒடிசாவில் இருந்து ஆந்திரா நோக்கி புறப்பட்டது. லாரி ஆந்திராவுக்கு வந்து சேர வேண்டிய நேரம் நெருங்கியும் வந்தடையவில்லை. அந்த டேங்கர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியின் அடிப்படையில் லாரி தற்போது எங்குள்ளது என்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், ஜி.பி.எஸ் கருவியும் ‘ஆப்’ செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், விஜயவாடா நகர ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் களத்தில் இறங்கினர். ஒடிசா  - ஆந்திரா சாலையில் ஆக்சிஜன் டேங்கர் லாரியை போலீசார் தேடினர். அப்போது, கிழக்கு கோதாவரி மாவட்டம் தர்மவரத்தில் அமைந்துள்ள ஒரு தாபாவில் லாரி நின்றிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், தூங்கிக் கொண்டிருந்த லாரியின் டிரைவரை எழுப்பினர். அவரிடம் விசாரித்த போது, கடுமையான வெயில் காரணமாக தொடர்ந்து லாரியை ஓட்டி வரமுடியாததால் சோர்வு ஏற்பட்டதாகவும், அதனால்  தாபாவில் லாரியை நிறுத்திவிட்டு சிறிது ஓய்வெடுக்க தூங்கியதாக தெரிவித்தார். டிரைவரின் நிலைமையை உணர்ந்த போலீசார், நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனடியாக ஆக்சிஜன் டேங்கர் லாரியை விஜயவாடாவுக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக சிறப்பு பாதை திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புடன் டேங்கர் லாரி மருத்துவமனையை வந்தடைந்தது. ஆக்சிஜன் சரியான நேரத்தில் வந்தடைந்ததால், நோயாளிகளின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது.

மூலக்கதை