மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. தலைநகர் டெல்லி மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட், எம். ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து புதிய உத்தரவை வெளியிட்டது.

அதன்படி, கொரோனா மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீரமைக்கவும், அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யவும், மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை அமைக்க வேண்டும்.

இந்த குழுவில் மேற்குவங்க மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பவதோஷ் பிஸ்வாஸ், டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் தலைவர் தேவேந்தர் சிங் ராணா, வேலூர் சி. எம். சி. மருத்துவமனையின் ககன்தீப் கங் மற்றும் அதன் இயக்குனர் ஜே. வி. பீட்டர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் நாடு முழுவதும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வர். எதிர்காலத்தில் தேவைப்படும் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக உறுதிசெய்ய இந்த பணிக்குழு உதவும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அறிவியல்பூர்வமாக முறைப்படுத்த செயல்முறைத் திட்டத்துக்கான பரிந்துரைகளை தேசிய பணிக்குழு அளிக்கும்.

எதிர்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுக்களைச் சமாளிக்கவும், தற்போது கொரோனாவை எதிர்கொள்ளவும் தேவையான முன்னேற்பாடுகளுக்கான திட்டங்களை தேசிய பணிக்குழு வகுக்கும்.

கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் பயிற்சி பெற்ற டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் ஆகியோரை அதிகப்படுத்துவது, அவர்களுக்கான ஊதியம் தொடர்பான பரிந்துரைகளையும் தேசிய பணிக்குழு அளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை