நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

* 3,200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
* நெரிசலின்றி பயணம்

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் வெளியூர்களில் பணிபுரிவோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால், அவர்கள் கூட்ட நெரிசலின்றி பயணித்தனர். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

கடந்த பிப்ரவரி கடைசியில் தினசரி பாதிப்பு 450 என்ற நிலை மாறி, தற்போது தினமும் 27 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 27,397.

கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தொற்றை கட்டுப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அத்தியாவசிய தேவைகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், தபால் சேவை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆக்சிஜன் வாயு, விவசாயிகளுக்கு விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், உணவு பொருட்கள் எடுத்துச்செல்லும் சரக்கு வாகனங்கள் ஆகியவைக்கு அனுமதி வழங்கப்படும். காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.

பஸ் போக்குவரத்து உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும்.

வாடகை ஆட்டோ, கார்கள் ஓடாது. பொது மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு பொது மக்கள், நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. சலூன் கடைகள் வழக்கம் போல் இயங்கின.

வெளியூர்களில் தங்கி பணிபுரிவோர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் பயணிகள் வசதிக்காக 9,636 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

3200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தநிலையில், இன்று சற்று அதிகமாக இருந்தது. பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம், குடும்பமாக வந்து வெளியூர்களுக்கு பயணித்தனர்.

அரசு சார்பில் கடலூர், சிதம்பரம், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால், அவர்கள் நெரிசலின்றி பயணித்து வருகின்றனர். சிதம்பரம் செல்வதற்காக இன்று கோயம்பேடு வந்த ஒரு பெண் பயணி ‘‘கூட்டம் அதிகமாக இருக்கும், பஸ் கிடைக்காது என்று நினைத்து வந்தேன்.

ஆனால் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டதால், அந்த சிரமம் இல்லை’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அதேசமயம் மார்க்கெட், ஜவுளிக்கடைகளில் இன்று மக்கள் திரண்டனர்.

2 வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். அதேபோல், சலூன் கடைகளிலும் இன்று கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மது பிரியர்களும் மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர்.

.

மூலக்கதை