2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்

தினகரன்  தினகரன்
2020ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்

டெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா உதவிகளை இந்தியா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளும் தொண்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து பெறும் மருத்துவ உபகாரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என கடந்த மே 3-ம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த FCRA எனப்படும் சட்டம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. FCRA எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் மற்றும் உதவிகளை பெறுவதற்கு FCRA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். இந்த சான்றிதழை பரிசோதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த பிறகே பிற நாடுகளில் இருந்து உதவிகளை பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. FCRA சான்றிதழை பெறாததால் வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை வாங்க முடியாமல் பல மிகப்பெரிய மருத்துவமனைகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் மடிந்து வரும் நிலையில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் அளிக்கும் ஆக்சிஜன் உபகரணங்கள் வெண்டிலெட்டர்களை கூட வாங்க முடியாத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருவதாக கூறப்படுகிறது. FCRA சட்டத்தில் எந்த பொருளுக்கும் எந்தவகையான நிறுவனத்துக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாததால் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகங்கள் வேதனை தெரிவிக்கின்றன.

மூலக்கதை