விண்வெளியிலிருந்து வந்த சீன ராக்கெட் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

தினமலர்  தினமலர்
விண்வெளியிலிருந்து வந்த சீன ராக்கெட் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

பெய்ஜிங்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீனாவால் அனுப்பப்பட்ட 'லாங் மார்ச் 5பி' ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளால் சர்வதேச விண்வெளி நிலையம் புவி வட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சீனா இடம்பெறவில்லை. அது சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பூமிக்கு மேலே, 370 கி.மீ., உயரத்தில் ஆங்கில டி வடிவில் 66 டன் எடையில் இந்த நிலையம் அமையவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக கடந்த ஏப்., 29 அன்று 'லாங் மார்ச் 5பி' என்ற ராக்கெட்டுடன் வின்கலம் ஒன்று புறப்பட்டது. அந்த ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்பும் படி வடிவமைத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பூமியுடனான கட்டுப்பாட்டை அந்த ராக்கெட் இழந்தது. பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழும் என்ற நிலை ஏற்பட்டது. புவி வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் அதன் பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிடும், பயம் தேவையில்லை என்றது சீனா.

அதே போல் இன்று (மே 09) அந்த ராக்கெட் புவி வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. அதன் பாகங்கள் பலவும் அழிந்து போன நிலையில், எஞ்சிய எச்சங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்தது. மாலத்தீவுகளுக்கு மேற்கே கடலில் விழுந்ததாக சீன விண்வெளி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு விழுந்துள்ளது. அதன் கழிவுகள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி தகவல்கள் இன்னும் குறிப்பிடப்படவில்லை.

மூலக்கதை