செவ்வாயில் ஹெலிகாப்டர் 'ஆடியோ' வெளியானது

தினமலர்  தினமலர்
செவ்வாயில் ஹெலிகாப்டர் ஆடியோ வெளியானது

கேப் கேனவரால் : செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அனுப்பியுள்ள ஹெலிகாப்டர் பறக்கும் ஓசை அடங்கிய, 'ஆடியோ' வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக, 'பெர்சவெரன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' ரோந்து வாகனத்தை, நாசா அனுப்பியுள்ளது. அத்துடன், 'இன்ஜெனியுட்டி' என பெயரிடப்பட்டுள்ள குட்டி ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்துள்ளது. பூமியில் உருவாக்கப்பட்ட ஒரு கருவியை, மற்ற கிரகங்களில் சோதனை செய்து பார்ப்பது இதுவே முதல் முறை. செவ்வாய் கிரகத்தில் காற்று மிகவும் மெதுவாகவே வீசும். அங்கு இழுப்பு விசை கிடையாது என்பதால், பொருட்கள் மேலே எழும்புவது மிக கடினம்.வெறும், 1.5 கிலோ எடையுள்ள இந்த ஹெலிகாப்டரின் விசிறி, நிமிடத்துக்கு, 2,500 முறை சுழலும் திறன் உடையது.

இதுவரை, நான்கு முறை அந்த ஹெலிகாப்டர் அங்கு பறந்துள்ளது.நேற்று ஐந்தாவது முறையாக, அந்த ஹெலிகாப்டர் பறந்தது. முந்தைய முயற்சிகளின்போது, ரோவர் சாதனத்திடம் இருந்து சற்று தொலைவில் ஹெலிகாப்டர் இருந்ததால், அது பறந்தபோது எழுந்த ஓசை பதிவாகவில்லை.நேற்றைய முயற்சியின்போது, ரோவர் சாதனத்துக்கு சற்று அருகில் இருந்ததால், ஹெலிகாப்டர் பறக்கும் ஓசை, மிகவும் மெதுவாக கேட்டது. அந்த, 'ஆடியோ'வை நாசா வெளியிட்டுள்ளது.புதிய தலைவர் 'நாசா' வின் புதிய நிர்வாகத் தலைவராக, முன்னாள், எம்.பி.,யான பில் நெல்சன், 78, பொறுப்பேற்றார்.

' 'எதிர்காலத்தில், பருவநிலை மாறுபாடு மிக முக்கிய பிரச்னையாக இருக்கும். நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்,'' என, நெல்சன் கூறினார்.

மூலக்கதை