மேற்கு வங்க வன்முறை ; தலைமை செயலருக்கு கவர்னர் 'சம்மன்'

தினமலர்  தினமலர்
மேற்கு வங்க வன்முறை ; தலைமை செயலருக்கு கவர்னர் சம்மன்

கோல்கட்டா : மேற்கு வங்க வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி, அம்மாநில தலைமை செயலருக்கு, கவர்னர், 'சம்மன்' அனுப்பி உள்ளார்.


சமீபத்தில், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், ஆளும் கட்சியான, முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த பயங்கர வன்முறையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:மேற்கு வங்க வன்முறை தொடர்பாக, மாநில காவல் துறை தலைவர், கோல்கட்டா காவல் துறை ஆணையர் ஆகியோரின் அறிக்கைகளை, உள்துறை செயலர், எனக்கு அனுப்பவில்லை. மாநிலத்தில் மிகப் பயங்கரமான வன்முறை நிகழ்ந்துள்ளது. எனினும், அது குறித்த அறிக்கையை அரசமைப்பு தலைமைக்கு அனுப்பாதது, துரதிர்ஷ்டவசமானது. இதை இப்படியே விட்டு விட முடியாது. எனவே, இது தொடர்பாக, மாநில தலைமை செயலருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேற்கு வங்க வன்முறை குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அனுப்பியிருந்தது. இக்குழு, நேற்று முன்தினம், கவர்னர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை