பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா * கோல்கட்டா அணி தவிப்பு | மே 08, 2021

தினமலர்  தினமலர்
பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா * கோல்கட்டா அணி தவிப்பு | மே 08, 2021

பெங்களூரு: வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. இதில் பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட காலவரையின்றி தொடர் ஒத்திவைக்கப்பட்டது. முதன் முதலில் பாதிக்கப்பட்ட  கோல்கட்டா அணி வீரர்கள் ஆமதாபாத்தில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சோதனையில் தேறிய வீரர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனிடையே கோல்கட்டா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியாரை தொடர்ந்து, ஒரு போட்டியில் கூட பங்கேற்காத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்பெர்டுக்கு (நியூசி.,) கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் மற்ற வீரர்களுடன் இணைந்து நாடு திரும்பாமல், ஆமதாபாத்தில் மருத்துவ வசதியுடன் தனிமைப்படுத்தப்பட்டார்.

சென்னை அணி பயிற்சியாளர்கள் பாலாஜி (பவுலிங்), மைக்கேல் ஹசி (பேட்டிங்) இருவரும் டில்லியில் இருந்து சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டனர். இதுபோல செய்பெர்ட்டும் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட வாய்ப்புள்ளது. அடுத்த 10 நாட்களில் 7 முறை நடத்தப்படும் சோதனையில் தேறினால் மட்டுமே இவர் நியூசிலாந்து திரும்ப முடியும்.

பிரசித் பாதிப்பு

இதனிடையே கோல்கட்டா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆமதாபாத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். உலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய அணியில், மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். தற்போது இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப், செய்பெர்ட்டை தொடர்ந்து கோல்கட்டா அணியில் கொரோனா பாதிக்கப்பட் நான்காவது வீரர் ஆனார் பிரசித் கிருஷ்ணா.

 

10

ஐ.பி.எல்., தொடரில் துவங்கும் முன் அக்சர் படேல் (டில்லி), நிதிஷ் ராணா (கோல்கட்டா), தேவ்தத் படிக்கல், டேனியல் சாம்ஸ் (பெங்களூரு) என நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அடுத்து கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த வருண் சக்ரவர்த்தி, சந்தீப், செய்பெர்ட், பிரசித் கிருஷ்ணா (கோல்கட்டா), அமித் மிஸ்ரா (டில்லி), சகா (ஐதாரபாத்) என இதுவரை 10 வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது.

 

மீண்டார் ஹசி

சென்னை அணி பயிற்சியாளர்கள் பாலாஜி (பவுலிங்), மைக்கேல் ஹசி (பேட்டிங்) என இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக இருவரும் டில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டனர். இதில் ஹசி கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். சென்னை அணி தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,‘‘டில்லியில் இருந்து கிளம்பும் முன் ஹசிக்கு ‘நெகட்டிவ்’ என ‘ரிசல்ட்’ வந்தது. தற்போது இவர் நலமாக உள்ளார். பயிற்சியாளர் பிளமிங் இன்று நாடு திரும்புகிறார்,’’ என்றார்.

மூலக்கதை