11ல் தற்காலிக சபாநாயகர் தலைமையில் சட்டசபை: சபைத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு

தினமலர்  தினமலர்
11ல் தற்காலிக சபாநாயகர் தலைமையில் சட்டசபை: சபைத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு

சென்னை:தற்காலிக சபாநாயகர் தலைமையில், நாளை மறுநாளான, 11ம் தேதி, புதிய சட்டசபைகூடுகிறது. அதற்கு அடுத்த நாளில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா அச்சம் கருதி, புதிய சட்டசபையின் முதல் கூட்டம், சென்னைகலைவாணர் அரங்கில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் - 18; விடுதலை சிறுத்தைகள் கட்சி - நான்கு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட் கட்சிகள், தலா, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றன.அ.தி.மு.க., - 66 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான, பா.ம.க., - ஐந்து; பா.ஜ., - நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பான்மை பெற்று, தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது.

பதவிப் பிரமாணம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 33 அமைச்சர்கள், நேற்று முன்தினம் பதவியேற்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்காலிக சபாநாயகராக, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துார் எம்.எல்.ஏ.,வும், சபையின் மூத்த உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியை, கவர்னர் நியமித்துள்ளார்.அவருக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில், தற்காலிக சபாநாயகராக, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பதற்காக, தமிழகத்தின், 16வது சட்டசபையின், முதல் கூட்டத்தொடர், 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு, சென்னை வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் துவங்க உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக, தலைமை செயலகத்தில் உள்ள, சட்டசபை அரங்கில், கூட்டம் நடக்கவில்லை.கலைவாணர் அரங்கில் நடக்கும் கூட்டத்தில்,எம்.எல்.ஏ.,க்கள், பதவியேற்கும் நிகழ்ச்சி நடக்கும்.தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். எனவே, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர்கள், அதற்கான தேர்தல் சான்றிதழை, தவறாமல் கொண்டு வர வேண்டும் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்புடன், அன்றைய நிகழ்ச்சி நிறைவடையும். மறுநாள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல், அதே கூட்டரங்கில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகருக்கு போட்டி இருக்காது என்பதால், தி.மு.க., சார்பில் நிறுத்தப்படுபவர், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவர்.

சபாநாயகராகஅப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர், தேர்வு செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சரவை கூட்டம்இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, முதல் அமைச்சரவை கூட்டம், இன்று நடக்க உள்ளது. பதவியேற்ற அன்றே, முதல் அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதாக, தகவல் வெளியானது. ஆனால், அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, கூட்டம் நடக்கவில்லை.

இன்று காலை, 11:30 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்டரங்கில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஜூன் மாதம், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை