கொரோனா நிவாரணம் ரூ.2,000: திட்டம் நாளை துவக்கிவைப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா நிவாரணம் ரூ.2,000: திட்டம் நாளை துவக்கிவைப்பு

சென்னை:அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கொரோனா நிவாரணத் தொகையாக, 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில், முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின், நாளை துவக்கி வைக்க உள்ளார்.

'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 4,000 ரூபாய், நிவாரணத் தொகை வழங்கப்படும்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.அதை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், 2.07 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையில், முதல் கையெழுத்திட்டார்.

சென்னை, தலைமை செயலகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், கூடுதல் அரிசி வழங்குவது; தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 4,000 ரூபாய் வழங்கும் வகையில், முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்குவது தொடர்பான, ஆலோசனை கூட்டம் நடந்தது.முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலர் இறையன்பு, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:'கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 4,000 ரூபாய் கொடுப்போம்' என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம்.அதன்படி, முதல் தவணை கொரோனா நிவாரணமாக, 2,000 ரூபாய் வழங்கும் பணியை, உணவுத்துறை மேற்கொள்ள உள்ளது.அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், 2.07 கோடி பேருக்கு, 4,153.39 கோடி ரூபாய், நிதி வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் பணியை, நாளை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

நாளை முதல், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ரேஷன் கடையிலும், ஒவ்வொரு நாளும், 200 பேருக்கு, 'டோக்கன்' வழங்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றி, காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை பணம் வழங்கப்படும்.ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த நிதி, மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும். முதல்வர், நாளை திட்டத்தை துவக்கி வைத்த பின், மாவட்டங்களில், அமைச்சர்கள் இத்திட்டத்தை துவக்கி வைப்பர்.

சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, நிவாரண நிதி கிடையாது. அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படும். வீடு வீடாக சென்று, டோக்கன் வழங்கப்படும். குடும்ப நபர்கள் யார் வேண்டுமானாலும் சென்று, பணம் வாங்கலாம்.இதை கண்காணிக்கும்பொறுப்பு, மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாளை முதல், டோக்கன் வழங்கப்படும். அதில் குடும்ப அட்டைதாரர் பெயர், ரேஷன் கடை பெயர், பணம் வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை இடம்பெறும்.கடை விற்பனையாளர்கள், டோக்கனை வழங்குவர். ஒவ்வொரு தாலுகாவிலும், பண வினியோகத்தை கண்காணிக்க, குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கார்டுதாரர் வீட்டில் வழங்கப்படுமா?

ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, கொரோனா நிவாரண தொகை, 2,000 ரூபாயை, கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், தொற்று பரவலை தடுக்க, 2020 மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் மாதம், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

முதலில் அந்த தொகை, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக கார்டுதாரர்கள், எந்த தேதி வர வேண்டும் என்ற, 'டோக்கன்' வழங்கப்பட்டது. இருப்பினும், அதை பின்பற்றாமல் கார்டுதாரர்கள், இஷ்டத்திற்கு வந்ததால், கூட்டம் சேர்ந்தது. பின், கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, ரேஷன் ஊழியர்கள் நிவாரண தொகையை வழங்கினர்.

தற்போது, முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2.07 கோடி கார்டுதாரர்களுக்கு, 4,153 கோடி ரூபாய் செலவில், தலா, 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை, முதல் தவணையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.ரேஷன் கடைகளில், தினமும், 200 கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் நிவாரண தொகை வழங்கினால், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கார்டு தாரர்கள் கூட்டம் சேர வாய்ப்புஉள்ளது.இதனால், கூட்டம் சேருவதை தடுக்க, கார்டுதாரர்களின் வீடுகளில் நிவாரண தொகை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

'தொற்றை வீழ்த்த ஒத்துழையுங்கள்'முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றே இல்லை என்ற நிலையை, தமிழகத்தில் உருவாக்க, அரசு முழு முயற்சியில் இறங்கி உள்ளது. கொரோனா நோய் பரவாமல் தடுப்பது; தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது போன்ற குறிக்கோள்களை, தமிழக அரசு முன்னெடுத்து செயல்படுகிறது.

முதல் அலையை விட மோசமாக, இந்த கிருமி உருமாறி உள்ளது. இப்போது, குழந்தைகள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் இறப்பு அதிகமாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது.வேறு நோய் பாதிப்பு
இல்லாதவர்களும், அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல்
வலிமையை, நோய் தொற்று இழக்க வைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும்
தகவல்கள், அச்சமடைய வைத்துள்ளன.

அந்த அளவிற்கு, தமிழகம் மோசம் அடையவில்லை. எனினும், ௧௦ மாவட்டங்களில், நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இரு வாரங்களில், எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு அதிகரித்தால், நோயை கட்டுப்படுத்துவது, மருத்துவ துறைக்கு பெரும் சவாலாகி விடும்.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். இன்னொரு ஊரடங்கு தேவை என்றனர். மருத்துவ நிபுணர்களும் அதையே பரிந்துரைத்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளை போடாமல், கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலில், 10 முதல், 24ம் தேதி வரை, தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் சேவை தவிர, பிற சேவை இருக்காது. ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஊரடங்கை
அறிவிக்கவில்லை என்றால், நோயை கட்டுப்படுத்துவது சிரமமானதாகி விடும்.
இதை உணர்ந்து, அருகில் உள்ள, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு சட்டத்தை,
அமல்படுத்தி உள்ளனர். தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது. நாட்டு மக்கள் அனைவரும், 14 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டை பயன்படுத்தி, கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
கொரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல், கொரோனாவை வீழ்த்த முடியாது என்பதை மனதில் வைத்து, மக்கள் எல்லோரும் செயல்பட வேண்டும்.அனைவரும் வீட்டிலேயே
இருங்கள்; முக கவசம் அணியுங்கள்; கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை, உடலில் அதிகப்படுத்துங்கள், பழங்கள், காய்கறிகளை, உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு அறிகுறி இருந்தாலும், மருத்துவருடைய
ஆலோசனைகளை பெறுங்கள்.பயம் மட்டும் வேண்டாம். இது, குணப்படுத்தக்கூடிய நோய் தான். இது, கஷ்டமான காலம் தான். அதே நேரத்தில், கடக்க முடியாத காலம் அல்ல. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக, நம் நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்து விட்டன. அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு, எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின்
கூறியுள்ளார்.

500 டன் ஆக்சிஜன் தேவை:பிரதமரிடம் ஸ்டாலின் பேச்சு'தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை, 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க
வேண்டும்' என, பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, 'கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த, புதிதாக பொறுப்பேற்றுள்ள, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.

'மத்திய அரசுக்கு, தமிழக அரசும் துணை நிற்கும்' என்றும், உறுதி அளித்தார். மேலும்,
'தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை, 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.அதை உடனடியாக பரிசீலிப்பதாக கூறிய பிரதமர், 'தமிழகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பரிசோதனைகள் தொடர்ந்து அதிக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். தொற்றால் அதிகம் பாதிக்கப்படாதவர்களை, வீட்டிலேயே இருக்கச் செய்து, கண்காணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்தார்.

மூலக்கதை