நாளை முதல் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு: அத்தியாவசிய சேவைகள் உண்டு

தினமலர்  தினமலர்
நாளை முதல் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு: அத்தியாவசிய சேவைகள் உண்டு

சென்னை:தமிழகத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, நாளை முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. நாளை காலை, 4:00 முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதேநேரத்தில், பால்,காய்கறி, மளிகை மற்றும் பத்திரிகை போன்ற அத்தியாவசிய சேவைகள், வழக்கம் போல உண்டு.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

இதற்கெல்லாம் தடை



* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட, வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்

* வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து, விமானம் மற்றும் ரயிலில் வரும் பயணியரை, தொடர்ந்து கண்காணிக்க, eregister.tnega.org இணையதளத்தில், 'இ- - பதிவு' முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு, பயணியர் சென்று வர, பயணச்சீட்டுடன் அனுமதிக்கப்படும்

* ஏப்., 26 முதல், 3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்புள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும், பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.க்ஷ

இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 'டுன்சோ' போன்ற, மின் வணிக நிறுவனங்கள் வழியாக, மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய, பகல், 12:00 மணி வரை அனுமதிக்கப்படும்.மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க, தடை விதிக்கப்படுகிறது.

மதுக் கடைகள் மூடல்



*முழு ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது

* அனைத்து உணவகங்களிலும், 'பார்சல்' சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடைகள் பகல், 12:00 மணி வரை மட்டும் செயல்படலாம்; அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை

* தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக, தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும், தங்கும் விடுதிகள் செயல்படலாம்

* உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது

* ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை

* மாநிலம் முழுதும், அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது

* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் என, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை

* சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும், சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட, தடை தொடர்கிறது. அதேபோல, மாவட்டங்களில் உள்ள, மொத்த வியாபார காய்கனி வளாகங்களில், சில்லரை வியாபார கடைகள் செயல்படாது

அரசு அலுவலகங்கள் இயங்குமா?



* சென்னை தலைமை செயலகம், மருத்துவத்துறை, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள், பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்த கட்டுப்பாடுகள், மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்

* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க, தடை விதிக்கப்படுகிறது. விதிவிலக்கு அளிக்கப் பட்ட தொழிற்சாலைகள் தவிர, பிற தொழிற்சாலைகள் இயங்க, தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை, அவை பின்பற்றலாம்

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. தினசரி பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டு தல ஊழியர்கள் நடத்த தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த, அனுமதி கிடையாது

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற, அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணியர் செல்ல, அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது

* அனைத்து கடற்கரை பகுதிகளிலும், எந்த நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் அனுமதி கிடையாது.ஆட்டோ, டாக்சி ஓடாது

* பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க, அனுமதி இல்லை

* நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை

* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான, தனியார், அரசு பஸ்கள், வாடகை டாக்சி, ஆட்டோ இயங்க தடை விதிக்கப்படுகிறது

* அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத்தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கும், மருத்துவமனை செல்வதற்கும், உரிய ஆவணங்களுடன் பயணிப்போர் அனுமதிக்கப்படுவர்

* முழு ஊரடங்கின் போது, உணவு வினியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்யும், மின் வணிக நிறுவனங்கள் தவிர, மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

பால், பத்திரிகை உண்டு



* பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற, மருத்துவத் துறை சார்ந்த பணிகள்; சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்து செல்லும் வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படும்

* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்

* வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத் தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

ஓட்டல்களில் 'பார்சல்' மட்டும்



* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை, 6:00 முதல், 10:00 மணி வரை; பகல், 12:00 முதல் மதியம், 3:00 மணி வரை; மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை, 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், அந்த நேரங்களில் மட்டும் செயல்படலாம். சாலையோர உணவகங்களுக்கு அனுமதி இல்லை

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்

* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், பகல், 12:00 மணி வரை செயல்படலாம்

* ரேஷன் கடைகள் காலை, 8:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்படும்

* தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குவோர், அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் சென்று வரலாம்

* நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கும்

* நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்

* தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம். இவற்றில் பணியாற்றுவோர், நிறுவனம் ஏற்பாடு செய்யும் பஸ் அல்லது சொந்த வாகனங்களில், நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்லலாம்

* திருமண நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல், இறப்பு நிகழ்வில், 20 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்

* தொலைத்தொடர்பு மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு, தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளலாம்

* அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்

* ரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும்

* வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள், அதிக பட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்

* அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் அக்கடைகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

* முழு ஊரடங்கு, நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளதையொட்டி, பொது மக்களும், நிறுவனங்களும், தமக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள, இன்று அனைத்து கடைகளும், நிறுவனங்களும், வழக்கம் போல, காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை செயல்படும்

* பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

முழு ஒத்துழைப்பு அவசியம்!



தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் வேகமாக உள்ளது. தினசரி நோய் தொற்றால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை; மருந்துகள் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ளது.இதனால், தொற்று ஏற்பட்டோர், சிகிச்சைக்கு சேர்ந்த ஓரிரு நாளிலேயே உயிரிழக்கும் அபாயம் காணப்படுகிறது.

முதல்வர் தன் பேச்சில் சொன்னது போல், இளைஞர்கள் இரண்டே நாளில் பாதிக்கப்பட்டு, மிகவும் அபாயகரமான நிலைகளை எட்டும் சூழல் காணப்படுகிறது. எனவே, கொரோனா பரவலை தடுக்க, மக்களின் உயிர் காக்க, வேறு வழியின்றி, தமிழக அரசு, நாளை முதல், 24ம் தேதி வரை, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை, பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி, வீட்டிலிருக்க வேண்டும். அப்போது தான் நோய் பரவல் சங்கிலியை அறுக்க முடியும்.

அத்தியாவசியத் தேவையின்றி, வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். இளைஞர்கள் ஊர் சுற்றுவதை நிறுத்த வேண்டும். வெளியில் செல்வோர், கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பால் சுத்தம் செய்யவும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்கவும்.முழு ஊரடங்கை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், நோய் பரவலைக் குறைக்கலாம். எனவே, பொது மக்கள், அரசு உத்தரவை முழுமையாக பின்பற்றி, நோயை கட்டுப்படுத்தஒத்துழைக்க வேண்டும்.

மூலக்கதை