இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உதவி: குவிகின்றன மருத்துவ உபகரணங்கள்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உதவி: குவிகின்றன மருத்துவ உபகரணங்கள்

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, ஏராளமான நிறுவனங்கள், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான, ஆக்சிஜன் செறிவூட்டிகள், பரிசோதனை பொருட்கள், மருந்துகள், படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை தாரளமாக அனுப்பி வருகின்றன.

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 4 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ராணுவம் உட்பட, அனைத்து தரப்பின் உதவியோடு, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலக நாடுகளும், இந்தியாவிற்கு உதவி வருகின்றன. அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு, 7,500 கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆறு விமானங்களில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பரிசோதனை பொருட்கள், முக கவசங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது. இது தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட, 45க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இணைந்து, இந்தியாவுக்கு, 25 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அனுப்பத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, தெர்மோ பிஷர், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களும், இந்தியாவுக்கு தாராளமாக உதவி வருகின்றன. தெர்மோ பிஷர் நிறுவனம், யுனைடெட் ஏர்லைன்ஸ் வாயிலாக, கொரோனா பரிசோதனைக்கு தேவையான பொருட்களை அனுப்பிஉள்ளது. இதில், தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சேகரிக்கும், சளி மாதிரி வறண்டு போவதை தடுக்கும், 46 லட்சம், 'டியூப்'களும் அடங்கும். இதனால், பரிசோதனை நேரம் தாமதமானாலும், நுண்ணுயிரிகள் வளர்ச்சியால், முடிவுகள் மாறுபடுவது தடுக்கப்படும்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. ஆம்வே நிறுவனம், அமெரிக்க வர்த்தக சபை வாயிலாக, 350 கோடி ரூபாய் நிதி வழங்கிஉள்ளது. இத்தொகையில், 1,000 வென்டிலேட்டர்கள், 25 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

டேவிட் அண்டு கரோல் வேன் ஆன்டெல் குடும்ப அறக்கட்டளை, 175 கோடி ரூபாய்க்கு மருத்துவ பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.இந்தியாவில், கொரோனா சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க, சுப் அறக்கட்டளை, அமெரிக்க - இந்திய அறக்கட்டளைக்கு, 350 கோடி ரூபாய் வழங்கிஉள்ளது. இத்தொகையில், 100 படுக்கைகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனை வசதிகள் செய்து தரப்பட உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த, சேகால் அறக்கட்டளையின் இந்திய பிரிவு, கிராமப்புறங்களில், 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. ஐ.நா., அமெரிக்க - இந்தியர்கள் கூட்டமைப்பு, சேவா இன்டர்நேஷனல் போன்ற பல அமைப்புகளும், கொரோனா சவாலை சமாளிக்க, இந்தியாவுக்கு உதவி வருகின்றன.

டாக்டர்கள் உதவி

அமெரிக்காவில், சமீபத்தில் துவக்கப்பட்ட, இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு, 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு அனுப்பும் பணியைத் துவக்கியுள்ளது. ஏற்கனவே, ஆமதாபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

சுகாதார அமைச்சர்கள் பேச்சு

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அமெரிக்க சுகாதார துறை அமைச்சர் சேவியர் பெக்கரா உடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கொரோனா நிலவரம் குறித்து பேசினார். அப்போது, ''கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவும்,'' என, சேவியர் பெக்கரா உறுதி அளித்தார்.

நிதி திரட்டுவதில் தீவிரம்

அமெரிக்காவின் கிரேட்டர் பாஸ்டன் நகரைச் சேர்ந்த, இந்திய - அமெரிக்க நலச் சங்கம், வலைதள மராத்தன் நிகழ்ச்சி வாயிலாக, நிதி திரட்டி, இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது. கனெக்டிகட்டைச் சேர்ந்த, கேரள சங்கம், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப, நிதி திரட்டி வருகிறது. இந்திய - அமெரிக்கரான, வந்தனா கர்னா, பீஹாரில், கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரங்கள் ஆகியவற்றை அனுப்ப, நிதி திரட்டி வருகிறார்.

மூலக்கதை