இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள் | மே 08, 2021

தினமலர்  தினமலர்
இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள் | மே 08, 2021

லண்டன்: ‘‘ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும்,’’ என, பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், வீரர்களுக்கு ‘கொரோனா’ உறுதியானதால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசன் முழுமையாக எமிரேட்சில் நடந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ கெவின் பீட்டர்சன், மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்து மண்ணில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர்சன் கூறியது:

ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை எமிரேட்சில் நடத்துவது குறித்து பேசுகின்றனர். ஆனால் இப்போட்டிகளை இங்கிலாந்தில் நடத்துவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் வரும் செப்டம்பரில் இந்தியா–இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடையும்.

இதனால் முன்னணி இந்திய வீரர்கள் இங்கு தான் இருப்பர். தவிர, இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக இத்தொடரில் பங்கேற்கலாம். தவிர இக்காலகட்டத்தில் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான தட்பவெப்பநிலை சரியாக இருக்கும்.

மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்காம், லண்டன் மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம். தவிர, ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கலாம். எனவே எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்காவை விட இங்கிலாந்தில் மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளை நடத்தலாம்.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

மூலக்கதை