ரிஷாப் பன்ட் நிதியுதவி: ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க | மே 08, 2021

தினமலர்  தினமலர்
ரிஷாப் பன்ட் நிதியுதவி: ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க | மே 08, 2021

புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதி, மருத்துவ கருவிகள் வாங்க நிதியுதவி வழங்கினார் இந்தியாவின் ரிஷாப் பன்ட்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், பிரட் லீ உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர்.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட், நிதியுதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதி, மருத்துவ கருவிகள் வழங்கி வரும் தனியார் அறக்கட்டளைக்கு நிவாரண நிதி வழங்கினார்.

இதுகுறித்து ரிஷாப் பன்ட் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘நாடு முழுவதும் கொரோனா தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இதனால் மரணமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். இந்நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் இப்போரில் வெற்றி காணலாம்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் தனியார் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கினேன். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்திட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்,’’ என, தெரிவித்திருந்தார்.

 

மூலக்கதை