இந்திய அணி பயணம் எப்போது * இங்கிலாந்து தொடருக்காக... | மே 08, 2021

தினமலர்  தினமலர்
இந்திய அணி பயணம் எப்போது * இங்கிலாந்து தொடருக்காக... | மே 08, 2021

புதுடில்லி: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியினர் ஜூன் 2ல் கிளம்புகின்றனர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

மூன்றரை மாதங்கள் நடக்கவுள்ள இத்தொடருக்கான கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் வரும் ஜூன் 2ல் கிளம்பிச் செல்லவுள்ளனர். அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அப்போது பயிற்சியில் ஈடுபட அனுமதி தரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,)  தரப்பில் வெளியான செய்தியில்,‘ இங்கிலாந்து செல்லும் முன் இந்திய அணி வீரர்கள் ஓட்டல் அறைகளில் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். 

2, 4, 7 வது நாட்களில் எடுக்கப்படும் கொரோனா சோதனையில் தேறினால் மட்டும் விமானத்தில் ஏற அனுமதிப்படுவர். அப்படியே ஜூன் 2ல் இங்கிலாந்து சென்ற பின், அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

சவுத்தாம்ப்டனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் தங்கவுள்ளனர். ஜூன் 13க்குப் பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்குஅனுமதியா

நீண்ட கால தொடர் என்பதால் வீரர்களுடன் குடும்பத்தினர் செல்ல அனுமதிக்கப்படுவர் எனத் தெரிகிறது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ஜூன் 18–22) முடிந்த பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்க (ஆக. 4) ஒரு மாதம் இடைவெளி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அனைவருக்கும் ஊசி

தவிர இங்கிலாந்து செல்லும் முன் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் முதற்கட்ட ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாவது கட்ட ஊசி, இங்கிலாந்தில் செலுத்திக் கொள்வர் என கூறப்படுகிறது.

 

செல்வாரா கங்குலி 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலைக் காண பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா இங்கிலாந்து செல்ல உள்ளனர். அப்போது ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளை லண்டனில் நடத்த பேச்சுவார்த்தை நடத்தலாம்.

மூலக்கதை