அன்னையைப் போல் தெய்வம் இல்லை...: இன்று உலக அன்னையர் தினம்-

தினமலர்  தினமலர்
அன்னையைப் போல் தெய்வம் இல்லை...: இன்று உலக அன்னையர் தினம்

உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால், அது அன்னை தான். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு (மே 12), உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

எப்படி வந்தது. :பண்டைய கிரீசில், "ரியா' என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் "சிபெல்லா' என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத் தாய்மார்களை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நவீன அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.

இன்று முடிந்தால் நேரிலோ அல்லது "மொபைல்' மூலமாகவோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.

மூலக்கதை