டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி

சோபியா: பல்கேரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி மல்யுத்தப்போட்டியின் 50கிலோ பிரிவில் அரையிறுதியில் வென்ற சீமா பிஸ்லா 4வது இந்திய வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார். பல்கேரியாவின் சோபியா நகரில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று மல்யுத்தப்போட்டி நடக்கிறது. அதில் நேற்று மகளிர் 50கிலோ எடை பிரிவு அரையிறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா(29), போலாந்து வீராங்கனை அன்னா லூசியாக்(33) உடன் மோதினார். மொத்தம் 3 சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆரம்பம் முதலே தற்காப்பு மோதலை கடைபிடித்த சீமா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாக்குதலை நடத்தி புள்ளிகளை குவித்தார். இறுதியில் 2-1 என்ற கணக்கில் அன்னாவை மண்டியிட வைத்தார். அதன் மூலம் சீமா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கூடவே விரைவில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெறும் 4வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை சீமா பெற்றார். இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத் (53கிலோ), அன்சு மாலிக் (57கிலோ), சோனம் மாலிக்(62கிலோ) ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்று விட்டனர். ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கு 4 இந்திய வீராங்கனைகள் தகுதிப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த இறுதிப்போட்டியில் லூசியா யமிலெத்(ஈக்வடார்) உடன் சீமா மோதியிருப்பார்.* வீரர்களும் 4 பேர்சோபியாவில் நடைபெறும் போட்டியின் மூலம் இந்திய வீரர் சுமித் மாலிக்(125கிலோ) ஒலிம்பிக் போட்டிக்கு நேற்று முன்தினம் தகுதிப் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் ரவி தஹியா(57கிலோ), பஜ்ரங் புனியா(65கிலோ), தீபக் புனியா(86கிலோ) ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

மூலக்கதை