கொல்கத்தா வீரர்களை விரட்டும் கொரோனா

தினகரன்  தினகரன்
கொல்கத்தா வீரர்களை விரட்டும் கொரோனா

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் விளையாடிய கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாவது தொடர்கதையாகி உள்ளது. உயிர் பாதுகாப்பு குமிழியில் இருந்த ஐபிஎல் வீரர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்குதான் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த அணியின் வருண், சந்தீப் இருவரும் தொற்றுக்கு ஆளானார்கள். அடுத்த நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் பாலாஜி, ஹஸ்ஸி ஆகியோருக்கும் தொற்று ஏற்பட ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் ஐபிஎல் வீரர்களுக்கு, குறிப்பாக கொல்கத்தா வீரர்களுக்கு தொற்று ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. கொல்கத்தா அணியின் வீரர் டிம் செய்போர்ட்(நியூசிலாந்து) நாடு திரும்புவதற்கு முன்பு பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அகமதாபாத்தில் தனிமையிலும், மருத்துவ கண்காணிப்பிலும் அவர் வைக்கப்பட்டுள்ளார். டிம் தவிர மற்ற நியூசி வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் தனி விமானத்தில் நியூசிலாந்து சென்றனர். கொல்கத்தா அணியின் வேகம் பிரசித் கிருஷ்ணா இப்போது 4வது ஆளாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய டெஸ்ட் அணியின் பதில் ஆட்டக்காரராக அவர் தேர்வாகி உள்ளார். இந்நிலையில் பிரசித்துக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மே 25ம்தேதிக்குள் ‘நெகட்டிவ்’வாக மாறினால் இந்திய அணியுடன் அவர் இணைய வாய்ப்பு உள்ளது.* ஆகா ஹஸ்ஸிகொரோனா தொற்றுக்கு ஆளான சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் பாலாஜி, மைக் ஹஸ்ஸி ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்தது சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகி காசி விஸ்வநாதன், ‘டெல்லியில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பே ஹஸ்ஸிக்கு நடந்த சோதனையில் ‘நெகட்டிவ்’ என்று வந்து விட்டது. எனினும் அவர் சென்னை ஹோட்டலில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். அதனை ஹஸ்ஸியும் உறுதி படுத்தியுள்ளார்.

மூலக்கதை