இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு உலகின் பெரிய சரக்கு விமானம் மருத்துவ கருவிகளுடன் புறப்பட்டது

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு உலகின் பெரிய சரக்கு விமானம் மருத்துவ கருவிகளுடன் புறப்பட்டது

லண்டன்: இங்கிலாந்தில் இருந்து முதல் கட்டமாக மருத்துவ உதவி பொருட்கள் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் விமான நிலையத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டாநவ் 124, மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் மூன்று 18 டன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 1000 வென்டிலேட்டர்கள், மருத்துவ உயிர்காக்கும் உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு ஆக்சிஜன் ஜெனரேட்டரும் 40 அடி சரக்கு கொள்கலன் அளவு உடையவை. இவை ஒவ்வொன்றும் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்.  ஒரே நேரத்தில் 50 பேருக்கு  பயன்படுத்தலாம். இங்கிலாந்தின் சரக்கு விமானம் இன்று காலை டெல்லி வந்தடையும். அதன் பின்னர் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘கடந்த ஏப்ரல் 27ம் தேதியிலிருந்து மே 7ம் தேதி வரை 6,608 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள், 3,856 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 14 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், 4330 வெண்டிலேட்டர்கள், 3 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவை வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை