பூமியை நோக்கி வரும் ராக்கெட் : ஆபத்து இல்லை என விளக்கம்

தினமலர்  தினமலர்
பூமியை நோக்கி வரும் ராக்கெட் : ஆபத்து இல்லை என விளக்கம்

பீஜிங் : 'கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட், வழியிலேயே எரிந்துவிடும் சாத்தியம் இருப்பதால், பூமியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை' என, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


விண்வெளி குறித்த ஆய்வுகளுக்காக, சர்வதேச விண்வெளி நிலையம், புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், சீனா இடம் பெறவில்லை. எனவே, தங்களுக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.பூமிக்கு மேலே, 370 கி.மீ., உயரத்தில் இந்த நிலையம் அமையவுள்ளது. இந்த புதிய விண்வெளி நிலையத்திற்கான முதல் கலத்தை, 'லாங் மார்ச் 5பி' என்ற ராக்கெட் வாயிலாக, கடந்த மாதம், 29ல், சீனா விண்ணில் ஏவியது. இந்த கலத்தின் எடை, 22 டன் என கூறப்படுகிறது.

சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி விட்டு, மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில், 'லாங் மார்ச் 5பி' ராக்கெட் ஈடுபட்டது.அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது.எந்த நேரமும் அந்த ராக்கெட், பூமியில் விழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. முழு தகவல் கிடைக்காததால், பூமியின் எந்தப் பகுதியில் அந்த ராக்கெட் விழும் என்பதை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.


இது குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கட்டுப்பாட்டை இழந்துள்ள ராக்கெட், பூமியின் புவி வட்ட பாதைக்குள் நுழையும்போது, அதன் பெரும்பாலான பகுதி தானாகவே எரித்து விடும். எனவே, பூமியில் இந்த ராக்கெட் பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இது பூமியின் எந்த பகுதியில் விழும் என்பது குறித்து, சரியான நேரத்தில் தகவல் வெளியிடப்படும். பெரும்பாலும், சர்வதேச கடல்பகுதியில் இந்த ராக்கெட் விழுவதற்கான வாயப்புகள் அதிகம் இருப்பதாக, நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை