10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டி ; இந்தியாவிற்கு ஐ.நா உதவி

தினமலர்  தினமலர்
10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டி ; இந்தியாவிற்கு ஐ.நா உதவி

நியூயார்க் : ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள், இந்தியாவுக்கு, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன.இந்தியா, கொரோனா சவாலை எதிர்கொள்ள, உலக நாடுகள் உதவி வருகின்றன.


ஐ.நா., செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது: இந்தியாவுக்கு, ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா., சிறார் நல நிதியம், ஐ.நா., மக்கள் தொகை நிதியம் ஆகியவை, 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன. அத்துடன், ஒரு கோடி முக கவசங்கள், சுகாதார பணியாளர்களுக்கான, 15 லட்சம் முக கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகளையும் வழங்கியுள்ளன. கொரோனா தடுப்பூசியின் வீரியத்தை பாதுகாக்கும், குளிர்சாதன பெட்டிகளையும் அளித்துள்ளன.


கொரோனா வைரஸ் ஆய்வு சாதனம், பரிசோதனை பொருட்கள், விமான நிலையங்களில் தட்பவெப்ப சோதனை இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளன.பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\6 நாட்களில் ஆறு விமானங்கள் :-


அமெரிக்கா, ஆறு நாட்களில், ஆறு விமானங்களில், 1,500 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1.25 லட்சம் பேருக்கு தேவையான, 'ரெம்டெசிவிர்' மருந்து, 10 லட்சம் கொரோனா பரிசோதனை பொருட்கள் ஆகியவற்றை அனுப்பியுள்ளது. மேலும், 550 மொபைல் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 25 லட்சம் முக கவசங்களையும் சப்ளை செய்துள்ளது.


மூலக்கதை