பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம்

புதுடில்லி:பிரபல, ‘நிர்மா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.

‘நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன்’ புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 5 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், 1,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 3,500 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்கள் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகையை கொண்டு, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம், சிமென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஆலைகளின் வாயிலாக, ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட, 2.23 கோடி டன் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இந் நிறுவனத்துக்கு மொத்தம், 11 தொழிற்சாலைகள் உள்ளன. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனம் இதற்கு முன், ‘லாபார்ஜ் இந்தியா’ என அழைக்கப்பட்டு வந்தது.கடந்த ஆண்டு பிப்ரவரியில், ‘இமாமி’ நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு, 83 லட்சம் டன் சிமென்ட் வணிகத்தை, 5,500 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கையகப்படுத்தல் முயற்சிக்கு, இந்திய சந்தைகள் போட்டி ஆணையமும், கடந்த மே மாதத்தில் அனுமதி வழங்கி உள்ளது.

மூலக்கதை