எதிர்பார்ப்பு! பி.ஏ.பி., திட்ட பிரதான கால்வாயை புதுப்பிக்க...அரசு ஆணை வெளியிட்டும் நிதி ஒதுக்கவில்லை

தினமலர்  தினமலர்
எதிர்பார்ப்பு! பி.ஏ.பி., திட்ட பிரதான கால்வாயை புதுப்பிக்க...அரசு ஆணை வெளியிட்டும் நிதி ஒதுக்கவில்லை

உடுமலை- பி.ஏ.பி., திட்டத்தின் பாசன ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாயை புதுப்பிக்க, புதிய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து, பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, 49.3 கி.மீ., துாரம் காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.திருமூர்த்தி அணையில், நீர் இருப்பு செய்யப்பட்டு, 124 கி.மீ., துாரம் உள்ள பிரதான கால்வாய் வழியாக, இரு மாவட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

முற்றிலும், மலைப்பகுதிகளில் அமைந்துள்ள காண்டூர் கால்வாயில், ஏற்பட்ட உடைப்புகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்ய, பல கட்டங்களாக நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ளப்பட்டது. விடுபட்ட பகுதிகளுக்கு, தற்போது, 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள பி.ஏ.பி., பிரதான கால்வாயிலும் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அணையிலிருந்து 1.2 கி.மீ., துாரத்திலிருந்து, 5.6 கி.மீ., துாரம் வரை, கால்வாயில், அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.உடுமலை கால்வாய் பிரியும் பகுதி முதல், தீபாலபட்டி கருப்பராயன் கோவில் வரை, கரிசல் மண்ணாக உள்ளதால், கால்வாய் கரைக்கு 'சிலாப்' ஒட்டினாலும், கான்கிரீட் அமைத்தாலும், மண் இளகி, சரிவு ஏற்படுகிறது. தண்ணீர் திறந்து விடும்போது, அபரிமிதமான நீர்க்கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.இதற்கான தொழில் நுட்ப வல்லுனர் குழு அமைத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதே போல், நெகமம் பகுதியில், 28 முதல் 36 கி.மீ., வரை, பிரதான கால்வாய் சேதமடைந்துள்ளது.கால்வாய் உடைப்பு காரணமாக, பாசன காலத்தில் கடும் பாதிப்பு ஏற்படுவதோடு, நீர்க்கசிவும் அதிகரித்து வருகிறது.

கால்வாய் கரைகளில் முழுவதும் கம்பி கட்டி, கான்கிரீட் அமைத்து, புதுப்பிக்க, 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடந்தாண்டு, இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டாகியும் நிதி ஒதுக்காமல் இழுபறியாகி வருகிறது. தற்போது, மூன்றாம் மண்டல பாசனம் நடந்து, இம்மாத இறுதியில் நிறைவு பெற உள்ளது. அதற்கு பின், ஆக.,வரை, காண்டூர் கால்வாய் மற்றும் ஆண்டு பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இச்சமயத்தில், பிரதான கால்வாய் புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கினால், ஒரே சமயத்தில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வாய்ப்பாக அமையும்.பி.ஏ.பி., விவசாயிகள் கூறியதாவது:சிறப்பான நீர்ப்பாசன திட்டத்தில், காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் ஆதாரமாக உள்ளது. காண்டூர் கால்வாயில் இறுதிக்கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரதான கால்வாய்க்கு அரசு ஆணை வெளியிடப்பட்டு, நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கவில்லை.தற்போது 3ம் மண்டல பாசன காலம் நிறைவு பெற்று, ஆக., மாதம் 4ம் மண்டல பாசனம் துவங்க உள்ளது. இடைப்பட்ட காலத்தில் பணிகளை முடிக்கும் வகையில், புதிய அரசு உடனடியாக நிதி ஒதுக்கவும், பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேணடும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

மூலக்கதை