புதுச்சேரி முதல்வராக 4வது முறையாக என்.ஆர்.ரங்கசாமி பதவியேற்பு: கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!

தினகரன்  தினகரன்
புதுச்சேரி முதல்வராக 4வது முறையாக என்.ஆர்.ரங்கசாமி பதவியேற்பு: கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!

புதுச்சேரி : புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவா்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் புதுச்சேரியில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி மீண்டும் மலரும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து கடந்த 3ம்தேதி கவர்னர் தமிழிசையை சந்தித்து ஆட்சியமைக்க ரங்கசாமி உரிமை கோரினார். அப்போது பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தொிவிக்கும் நேரத்தில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.அதன்படி புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இன்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்றுக் கொண்டார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும், முதல்வராக ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 4வது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரியின் 20வது முதல்வராக ரங்கசாமி பதவியேற்ற நிலையில் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தபின் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. மக்களாட்சி மீண்டும் புதுச்சேரியில் மலர்ந்தது.

மூலக்கதை