கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க இடமில்லை; இந்தா வெச்சுக்குங்க... மனுஷனை விட நிலம் முக்கியமா?.. சுடுகாட்டிற்கு விளை நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி

தினகரன்  தினகரன்
கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க இடமில்லை; இந்தா வெச்சுக்குங்க... மனுஷனை விட நிலம் முக்கியமா?.. சுடுகாட்டிற்கு விளை நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி

காஜியாபாத்: கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க இடமில்லாத நிலையில், சுடுகாட்டிற்காக தனது விளை நிலத்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தானமாக கொடுத்துள்ளார். கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை முழு நாட்டிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் பலர் சிகிச்சை பெறமுடியாமல் உயிரை இழந்து வருகின்றனர். இறந்தவரின் சடலங்களை தகனம் செய்யவோ, புதைப்பதற்கோ இடமில்லாமல் பல நகரங்களில் தவிக்கும் சூழல் நிலவி வருகிறது. இறந்தவரை தகனம் செய்வதற்காக சுடுகாட்டில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சாஹிபாபாத் அடுத்த கர்ஹெராபில் வசிக்கும் சுஷில் குமார் என்ற விவசாயி, இந்த கொடூரமான சூழ்நிலையைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தார். அவர் தனது 1,500 கெஜம் அளவுள்ள விவசாய நிலத்தை சுடுகாடாக பயன்படுத்த மக்களுக்காக நன்கொடையாக வழங்கினார். இவர் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் தற்போது இறுதிச் சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்த நிலத்தில் 10 தளங்களை தகன மேடைகள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. தகனம் செய்வதற்காக கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை நன்கொடையாக வழங்கிய முதல் நபர் சுஷில் குமார் என்று மாவட்ட நிர்வாகமே அவரை பாராட்டி உள்ளது. மனிதகுலத்திற்கு ஒரு முன்மாதிரியாக உள்ள சுஷில் குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து சுஷில் குமார் கூறுகையில், ‘கொரோனா தொற்றால் ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது உடலை கூட தகனம் செய்ய இடமில்லை. இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய 10 முதல் 20 மணி நேரம் வரை காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால், எனது விவசாய நிலத்தின் ஒருபகுதியை மாவட்ட நிர்வாகத்திடம் நன்கொடையாக அளித்துவிட்டேன்’ என்று கூறினார்.

மூலக்கதை