4வது முறையாக புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
4வது முறையாக புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி இன்று பிற்பகல் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு கவா்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின.

என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 3ம்தேதி கவர்னர் தமிழிசையை சந்தித்து ஆட்சியமைக்க ரங்கசாமி உரிமை கோரினார்.

அப்போது பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

அதை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தொிவிக்கும் நேரத்தில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இன்று பிற்பகல் 1. 20 மணிக்கு கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்றுக் கொள்கிறார். முதல்வராக ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

பின்னர் 4வது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். 20 நிமிடத்தில் விழா முடிக்கப்படுகிறது.



அதைத் தொடர்ந்து சட்டசபைக்கு வரும் ரங்கசாமி, தனது அலுவலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது பொறுப்பினை முறைப்படி ஏற்றுக் கொள்கிறார். அப்போது மக்கள் நலன்சார்ந்த முதல் திட்டத்துக்கு அவர் ைகயெழுத்திடுவார் என்று தெரிகிறது.

முன்னதாக அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதேநேரத்தில் ரங்கசாமியுடன் புதிய அமைச்சர்கள் யாரும் இன்று பதவியேற்கவில்ைல.

இவ்விழாவில் புதிதாக தேர்வாகி உள்ள அனைத்து எம்எல்ஏக்கள், அரசு செயலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட 50 நபர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

பாஜக எம்எல்ஏவான நமச்சிவாயத்துக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

இது மத்திய அரசின் கையில் உள்ளது என ரங்கசாமி கூறியிருந்த நிலையில் புதுச்சேரியில் துணை முதல்வர் பதவியை உருவாக்கி அதை அனுமதிக்கும் ஆணையை மத்திய உள்துறை புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு விரைவில் அனுப்பி வைக்க உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு அமைச்சரவை விரிவாக்கம் 10 அல்லது 11ம்தேதிகளில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது என்ஆர் காங்கிரசில் 3, பாஜகவில் 2 அமைச்சர்கள் பதவியேற்பர் என்று தெரிகிறது.

.

மூலக்கதை