குவியல் குவியலாக எரியூட்டப்படும் உடல்கள்!: இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவுக்கு பலி..!!

தினகரன்  தினகரன்

டெல்லி: உலகளவில் கடந்த 10 நாட்களில் வேறு எந்த நாட்டை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2ம் அலையில் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனாவின் தீவிரம் குறைந்தபாடில்லை. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மடிகின்றனர். எங்கு பார்த்தாலும் கொரோனா நோயாளிகளை எரிக்கும் தகன மேடைகள் எரியூட்டப்படியே இருக்கிறது. கிட்டத்தட்ட திகில் பட காட்சி போலவே இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலியாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் உலகிலேயே 10 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகளை பதிவு செய்த நாடாக இந்தியா மாறியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 34,798 பேரும், பிரேசிலில் 32,692 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நாடு முழுவதும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் 1 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை