இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்: 'இந்தியாவின் தொற்று நிலை, நம் அனைவருக்கும் அடித்த எச்சரிக்கை மணி' என, யூனிசெப் எனப்படும், ஐ,நா., சர்வதேச குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து, யூனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரியாட்டா போர் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்க பட்டு உள்ளது. இந்த சோகமான நிலை, நம் அனைவருக்கும் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. இந்நேரத்தில், இந்தியாவுக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், உலகில், வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும்.

யூனிசெப் சார்பில், இந்தியாவுக்கு வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் பல சாதனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தெற்காசியாவின் பல நாடுகளிலும், வைரஸ் தொற்று அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதை தடுப்பதற்கு, உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


யு.எஸ்.ஐ.பி.சி., எனப்படும், அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையின் பரவலால், இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலை மோசமானால், உலகத்தின் நிலையும் மோசமாகி விடும்.

அதனால், இந்தியாவுக்கு, இந்த நெருக்கடியான நேரத்தில், உலகநாடுகள் உதவி செய்ய வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த, 40 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இணைந்து, சிறப்பு குழு ஒன்றை அமைத்து, ஏராளமான மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை