கொரோனா புகுந்தது எப்படி * தலைவர் கங்குலி விளக்கம் | மே 06, 2021

தினமலர்  தினமலர்
கொரோனா புகுந்தது எப்படி * தலைவர் கங்குலி விளக்கம் | மே 06, 2021

புதுடில்லி: ‘‘கொரோனா பாதுகாப்பு வளையத்தில் எங்கு, எப்படி தவறு நடந்தது என்று சொல்வது கடினம், ஆனால் விதிகள் எதுவும் மீறப்படவில்லை,’’ என கங்குலி தெரிவித்தார்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. 52 நாட்களில் 60 போட்டிகள் நடக்க இருந்தன. ஆனால் கோல்கட்டா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், ஐதராபாத் வீரர் சகா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா என அடுத்தடுத்து நான்கு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. வேறு வழியில்லாத நிலையில் ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 24 நாட்களில் 29 போட்டிகள் மட்டும் நடந்தன.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர், முன்னாள் கேப்டன் கங்குலி 48, கூறியது:

கொரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இப்படி ஒரு நிலைமை எப்படி ஏற்பட்டது என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. விதிகள் மீறப்படவில்லை என்றே எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. இந்தியாவில் ஏராளமான மக்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என கூறுவது கடினம். அதுபோல வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது எப்படி என சொல்வதும் கடினம்.

ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு பயணம் செய்த போது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதற்கான காரணங்கள் குறித்து ஆராய உள்ளோம். எமிரேட்சில் கடந்த சீசனில் மூன்று மைதானங்களில் தான் போட்டிகள் நடந்தன. அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது. விமான பயணங்கள் இல்லை. மீண்டும் எமிரேட்சில் நடத்துவது குறித்து ஆலோசித்தோம். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்திருந்தது. இதனால் ஆறு மைதானங்களில் நடத்த திட்டமிட்டோம்.

ஆனால் கடந்த மூன்று வாரத்தில் திடீரென அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு விட்டது. தற்போது தொடர் நிறுத்தப்பட்டு சில நாட்கள் தான் ஆகியுள்ளன. ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு முன் இடைப்பட்ட நாட்களில், மீதமுள்ள போட்டிகளை நடத்த முடியுமா என ஆலோசித்து வருகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

 

கங்குலி கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு என தனியாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் எதுவும் இல்லை. தற்போது அனைவரும் தங்களது வீடுகளுக்கு செல்லவுள்ளனர். மாநில அரசுகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால், வீரர்கள் அங்கு சென்று செலுத்திக் கொள்வது தான் எளிதாக இருக்கும்,’’ என்றார்.

 

மிகவும் கடினம்

கங்குலி கூறுகையில்,‘‘இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் இரு அணி வீரர்களுக்கு கொரோனா ஏற்பட, தொடர் நிறுத்தப்பட்டு மீண்டும் போட்டிகள் துவங்கின. ஏனெனில் இத்தொடர் ஆறுமாதம் நடக்கும். ஐ.பி.எல்., அப்படியல்ல, வீரர்கள் தற்போது நாடு திரும்புகின்றனர், மீண்டும் ஒருங்கிணைப்பது மிகவும் கடினம்,’’ என்றார்.

 

மூலக்கதை