தமிழகத்துக்கு போதிய ஆக்சிஜன்: உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்

சென்னை :தமிழகத்துக்கு, இன்றைக்குள் போதிய ஆக்சிஜன் கிடைப்பதை, மத்திய அரசு உறுதி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 'ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டெசிவிர்' மருந்து, தடுப்பூசி மருந்து கையிருப்பு குறித்த விபரங்களை அளிக்கும்படி, இரு மாநில அரசுகளுக்கும், தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குனர் உமாநாத் ஆகியோர் ஆஜராகினர்.செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்தும், ஆக்சிஜன் சப்ளை நமக்கு போதுமானதாக உள்ளதா எனவும், தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், உமாநாத் இருவரும் பதில் அளித்தனர்.

விசாரிக்க குழு



அவர்கள் கூறியதாவது:ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை; இறந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல; உயிரிழப்பு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு, தற்போது ஆக்சிஜன் தேவை, 475 டன்; மத்திய அரசு அதிகாரிகள், அண்டை மாநில அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில், நமது தேவை, 475 டன் என, தெரிவிக்கப்பட்டது. மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தின்படி, நமக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படவில்லை.கேரள மாநிலம், கஞ்சிக்கோட்டில் இருந்து கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்து தொடர்ந்து வழங்க வேண்டும்.

நமக்குள்ள ஆக்சிஜன் கையிருப்பு காலியாகி வருகிறது. நாளை முதல் பற்றாக்குறை ஏற்படும். எனவே, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக, 475 டன் ஆக்சிஜன் வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படுக்கைகள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கூடுதலாக, 8,129 எண்ணிக்கையிலான படுக்கைகள், இன்றைக்குள் தயாராகி விடும் என, எதிர்பார்க்கிறோம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்துக்காக, 10.30 லட்சம், 'டோஸ்' மருந்து வாங்குவதற்கு, பணம் செலுத்தி விட்டோம்.



கண்காணிப்பு



ரெம்டெசிவிர் மருந்து, 24 ஆயிரம் குப்பிகள் இதுவரை விற்கப்பட்டுஉள்ளன. இந்த மருந்து வழங்குவதற்கான மையங்களை, கோவை, மதுரையில் விரைவில் திறக்க உள்ளோம். கள்ளச்சந்தையில் விற்பனையை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; உரிய கண்காணிப்பை மேற்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, ''ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில், 25 டன் மட்டுமே தெலுங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டது.

''ஸ்டெர்லைட், ஒரு வாரத்தில் உற்பத்தியை துவக்கும். வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு, சுங்கத்துறை, ஒரு மணி நேரத்தில் ஒப்புதல் அளிக்கிறது,'' என்றார்.மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''ஆக்சிஜன் காலியாகி வருகிறது; நமக்கு, 475 டன் தேவைப்படுகிறது. மத்திய அரசுக்கு, உத்தரவிட வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2ம் தேதி நடந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு தினமும், 475 டன் ஆக்சிஜன் வழங்குவதற்கு, ஒருமித்த முடிவெடுக்கப்பட்டதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. சனிக்கிழமைக்குள் போதிய ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால், கடுமையான சூழல் ஏற்படும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர். உற்பத்தி அளவை பொறுத்து, சமமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு பாதகமாகவும் ஆகி விடக் கூடாது.தமிழகத்துக்கு, 475 டன் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தின் தேவையை சமாளிக்க, போதிய ஆக்சிஜன் வழங்குவதை, இன்றைக்குள் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் இல்லாமல், யாரும் உயிரிழந்து விடக் கூடாது.டில்லியில் உள்ள மருத்துவமனைகளில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவி உள்ளது. அத்தகைய யூனிட்டுகளை, சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் நிறுவ, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடுப்பூசிக்கான மருந்தை, உரிய நேரத்தில் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்;

அப்போது தான், வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில், வசதிகளை கண்காணிக்க, கலெக்டர் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை வரும், 12க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அதற்குள் அவசரம் கருதினால், எப்போது வேண்டுமானாலும் முறையிடலாம் என்றும், அதற்காகவே இங்கு இருப்பதாகவும், தலைமை நீதிபதி தெரிவித்தார்.


செங்கல்பட்டில் தடுப்பூசி



வழக்கறிஞர் கனகராஜ் ஆஜராகி, ''செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை துவங்க வேண்டும்,'' என, கோரினார். உடனே, தலைமை நீதிபதி, 'தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைந்து துவங்கினால், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களுக்கும் வழங்கலாம்' என, அறிவுறுத்தினார். அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 'டெண்டர்' கோரப்பட்டிருப்பதாகவும், அடுத்த வாரம் பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார்.


அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்



கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகம் இருப்பதால், அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒத்திவைக்க வேண்டும் என, மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தபட்சம், 50 சதவீத படுக்கைகளை, கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும். சாதாரண பாதிப்புகளுக்கு, மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதை தவிர்க்குமாறும், ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது.மாநிலத்தில் உள்ள, ஆக்சிஜன் வசதிகளை முறையாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில், அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைப்பதன் வாயிலாக, அதற்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை சேமிக்கலாம்.இந்த உத்தரவை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தை, அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

மூலக்கதை