நாடாளுமன்ற கட்டிடம், சிலைகள் கட்ட நிதி ஒதுக்கும் மத்திய அரசு தடுப்பூசி வாங்க ஏன் ரூ.30,000 கோடி ஒதுக்கக்கூடாது?!: மம்தா கேள்வி

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் சிலைகள் அமைக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் மத்திய அரசு, கொரோனாவால் மக்களின் உயிர் பறிபோகும் இந்த கடினமான சூழ்நிலையில், தடுப்பூசி வாங்க ஏன் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கக்கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், தடுப்பூசி வாங்க ஏன் 30,000 கோடி ரூபாய் ஒதுக்கக்கூடாது என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், மேற்கு வங்க மாநிலத்திற்கு இலவச தடுப்பூசி வழங்க தான் பிரதமர் மோடிக்கு விடுத்த கோரிக்கை மீது இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் சிலைகள் அமைக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் மத்திய அரசு, கொரோனாவால் மக்களின் உயிர் பறிபோகும் இந்த கடினமான சூழ்நிலையில், தடுப்பூசி வாங்க ஏன் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கக்கூடாது என வினவியுள்ளார். பி.எம்.கேர் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே போனது என்றும் மக்களின் உயிர்களோடு ஏன் விளையாடுகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்த பாஜக, அதனை சகித்துக்கொள்ள முடியாததால் அக்கட்சி தலைவர்கள் மேற்குவங்கத்தில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டார். இதனிடையே தேர்தலுக்கு பின்னர் நடந்த கலவரங்களில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 16 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மம்தா, கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை பாரபட்சமின்றி வழங்கப்படும் என குறிப்பிட்டார். 

மூலக்கதை