ஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்தவர்: இலங்கை வீரர் திசாரா பெரேரா ஓய்வு

தினகரன்  தினகரன்
ஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்தவர்: இலங்கை வீரர் திசாரா பெரேரா ஓய்வு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2009ஆம் ஆண்டு தனது 20 வயதில் கிரிக்கெட் கேரியரை துவங்கிய திசாரா பெரேரா இலங்கை அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டனாகவும் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திய அனுபவம் உடையவர். இந்நிலையில் தனது 32 வயதிலேயே அவர் திடீரென தனது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். பெரேரா இதுவரை 166 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2338 ரன்களும், 175 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1204 ரன்களையும், 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அது தவிர 6 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி அண்மையில் சாதனை படைத்திருந்தார். இப்படி இலங்கை அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய பிறகு நேற்று தனது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். ``இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும் அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். மேலும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதால் நான் இப்போதைக்கு இந்த முடிவை எடுத்துள்ளேன்’’ என்று திசாரா பெரேரா தனது ஓய்வு அறிவிப்பில் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இலங்கை அணி சரியான வீரர்கள் இன்றி அனைத்து அணிகளிடம் தோல்வி அடைந்து தவித்து வரும் நிலையில் அணியில் இருந்த ஒரே ஒரு அனுபவ வீரரும் அணியில் இருந்து ஓய்வு பெற்றது. இலங்கை அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை