2019ல் அமேசான் தலைவர் விவாகரத்து பெற்ற நிலையில் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி திடீர் விவாகரத்து

தினகரன்  தினகரன்
2019ல் அமேசான் தலைவர் விவாகரத்து பெற்ற நிலையில் பில்கேட்ஸ்மெலிண்டா தம்பதி திடீர் விவாகரத்து

நியூயார்க்: உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது மனைவி மெலிண்டாவிடம் இருந்து பரஸ்பர விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் என்பவருடன் இணைந்து ‘மைக்ரோசாப்ட்’ என்ற நிறுவனம் தொடங்கிய காலத்தில், அதன் தலைமை செயல் அதிகாரியாக பில்கேட்ஸ் செயல்பட்டார். தொடர்ந்து அவர், 1987ல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றினார். நிறுவனத்தின் மேலாளரான மெலிண்டா என்பவரை பில் கேட்ஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 1996ல் ஹவாயில் நடந்தது. அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. எவ்வித லாப நோக்கும் இல்லாமல், உலகளவிலான கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலன் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியில் இருவரும் இணைந்து தொடர இருக்கிறோம். இருந்தாலும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள (விவாகரத்து) நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று அறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி, கடந்த 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  முன்னதாக அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி பெசோஸ் ஆகியோர் 2019ம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். தொடர்ந்து மெக்கென்சி ஸ்காட் மறுமணம் செய்து கொண்டார். அமேசானில் 4% பங்குகளைப் பெற்ற மெக்கென்சி, தற்போது தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு 36 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமானதாக இருக்கும். உலகின் முன்னணி பணக்காரர்களின் சொந்த வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்பட்டு, அவர்கள் விவாகரத்து பெறுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மூலக்கதை