எந்த பதவியை ராஜினாமா செய்வது; குழப்பத்தில் முனுசாமி, வைத்திலிங்கம்

தினமலர்  தினமலர்
எந்த பதவியை ராஜினாமா செய்வது; குழப்பத்தில் முனுசாமி, வைத்திலிங்கம்

சென்னை :சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு எம்.பி.,க்கள் எந்த பதவியை ராஜினாமா செய்வது என்ற குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. க்களாக உள்ளனர். வைத்திலிங்கத்தின் எம்.பி. பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிகிறது. கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026 ஏப்ரல் வரை உள்ளது.

இருவரும் எம்.எல்.ஏ. வானால் அமைச்சராகலாம் என்ற எண்ணத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களுக்கு 'சீட்' வழங்காமல் கட்சியில் வேறு யாருக்காவது வழங்கலாம் என மற்ற நிர்வாகிகள் தலைமையை வலியுறுத்தினர்.

இருவரும் பன்னீர் செல்வம், பழனிசாமியை வற்புறுத்தி சட்டசபை தேர்தலில் களம் இறங்கினர்.கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த இருவரும் இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என பணத்தை வாரி இரைத்தனர். அதற்கு பலன்கிடைத்தது.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் அதற்கு இடைத்தேர்தல் வரும். அதில் வெற்றி பெற பெரும் தொகையை செலவிட வேண்டும். மேலும் எதிர்க்கட்சியாக இருந்து வெற்றி பெறுவது சிரமம். எம்.எல்.ஏ. க்கள் எண்ணிக்கை குறையும்.அதேநேரத்தில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால் ஏற்கனவே காலியாக உள்ள எம்.பி. பதவிகளுடன் சேர்த்து மூன்று பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு எம்.பி. பதவியை பெற முடியும். எனவே எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி தலைமை கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதுவாக இருந்தாலும் ஓரிரு நாளில் முடிவெடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இருவரின் பேராசையால் இரண்டு எம்.பி. பதவிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கட்சியினர் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

மூலக்கதை