மருந்து பதுக்கும் அரசியல்வாதிகள்: வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

தினமலர்  தினமலர்
மருந்து பதுக்கும் அரசியல்வாதிகள்: வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி:கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 'ரெம்டெசிவிர்' உள்ளிட்ட சில மருந்துகளை பதுக்கி வைத்து வினியோகம் செய்யும் அரசியல்வாதிகளை கண்டறிந்து, வழக்குப்பதிவு செய்யும்படி, போலீசாருக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்கு, கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீபக் சிங் என்பவர், டில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்தார். அதன் விபரம்:

டில்லியில், சில அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, ரெம்டெசிவிர் மருந்துகளை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து வினியோகம் செய்கின்றனர். கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.மக்கள் மருந்துக்காக அல்லாடும் நேரத்தில், இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து மருந்துகள் கிடைக்கின்றன. இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ள சந்தையில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மருந்துகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து வினியோகிக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கும்படி, மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக வழக்கு பதிவு செய்யவும், டில்லி போலீசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒரு வாரத்திற்குள், நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி, போலீசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும், 17ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

'ரெம்டெசிவிர்' தயாரிப்பு: மூன்று மடங்கு உயர்வு!



பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கடந்த மாதம், 12ம் தேதி நிலவரப்படி, 20 தொழிற்சாலைகளில், மாதம் ஒன்றுக்கு, 37 லட்சம் குப்பிகள் 'ரெம்டெசிவிர்' மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி, மாதம் ஒன்றுக்கு, 1.05 கோடி குப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரே மாதத்தில், ரெம்டெசிவிர் தயாரிப்பு, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, விரைவில் தட்டுப்பாடு நீங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை