கேரளாவில் மினி ஊரடங்கு அமலானது: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் மினி ஊரடங்கு அமலானது: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மினி ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில்  கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக 35 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் முதல்  சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு  மட்டுமே பொதுமக்கள்  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவையில்லாமல் பொது இடங்களில்  சுற்றித்திரிபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இந்த நிலையில் நேற்று (4ம் தேதி) முதல் 9ம் தேதி வரை 6  நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும். பால்  காய்கறி,  பலசரக்கு, மீன், இறைச்சி கடைகள் மட்டுமே திறக்க அனுமதி . கட்டிட பணிகள்,  தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில், விமானம் உள்பட பொது  போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படும். விமானம்,  ரயில், பஸ் நிலையங்களுக்கு செல்பவர்கள்  அனுமதிக்கப்பட்டனர்.  ஓட்டல்களில் பார்சல் மட்டுமே  அனுமதிக்கப்பட்டது. நகைக்கடைகள், துணிக்கடைகள் மற்றும் சலூன்களை  திறக்கக்கூடாது. சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லை. வழிபாட்டு  தலங்களில் 50 பேருக்கு மேல் அனுமதியில்லை. வங்கிகள் காலை 10 முதல் மதியம் 1  மணி வரை  மட்டுமே செயல்படும். கேரள போக்குவரத்து கழக பஸ்களின் இரவு நேர  சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல கடுமையாக  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மினி ஊரடங்கால், கேரளா முழுவதும் சாலைகள்  வெறிச்சோடின. போலீசார் முக்கிய இடங்களில் கடும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.‘தினசரி பாதிப்பு 50 ஆயிரம் வரை உயரும்’கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘கேரளாவில் வரும் நாட்களில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும். தினசரி ேநாயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை  உயரும். பின்னர் மெதுவாக குறைய தொடங்கும். மினி  ஊரடங்கால் பலன் ஏற்படவில்லை எனில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதுகுறித்து வரும் 7ம் தேதி தீர்மானிக்கப்படும்’’ என்றார்.

மூலக்கதை