ஒரே நாளில் 20,034 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஆந்திராவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 20,034 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஆந்திராவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்

திருமலை: ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு விதிப்பது என்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரத்து 207 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் விஜயவாடாவில் ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் 3 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர்  பேர்னி நானி  நிருபர்களிடம் கூறியதாவது:  ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் புதன்கிழமை (நாளை) நண்பகல் 12 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது. எனவே ஊரடங்கு நேரத்தில்  பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. குறுகிய மற்றும் தொலை தூர பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். அரசு, தனியார்  போக்குவரத்திற்கு  அண்டை மாநிலங்களுக்கு செல்லும் இன்டர்ஸ்டேட்  சேவை, தொலை தூர பொதுபோக்குவரத்து  சேவைகளும் ரத்து செய்யப்படும். மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பிரச்னையை தீர்க்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஒடிசாவிலிருந்து ஆக்ஸிஜனைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 7ம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாட திட்டத்தில்  கல்வி கற்பிக்கப்பட உள்ளது.  2024-25ம் ஆண்டில், அரசு  பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்இ பாட திட்டத்தில்  படித்து தேர்வு எழுதுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை