27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்தது பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதிகள் விவாகரத்து: சேர்ந்து பணியாற்றுவோம் என்று டிவிட்டரில் பதிவு

தினகரன்  தினகரன்
27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்தது பில்கேட்ஸ்மெலிண்டா தம்பதிகள் விவாகரத்து: சேர்ந்து பணியாற்றுவோம் என்று டிவிட்டரில் பதிவு

நியுயார்க்: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் தங்களது 27 ஆண்டுகால திருமண பந்தத்தை பரஸ்பரமாக  முறித்து கொள்வதாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மெலிண்டா புரொடக்‌ஷன் மேலாளராக 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். நியூயார்க்கில் நடந்த விருந்தொன்றில் பில்கேட்ஸ் முதன் முதலாக மெலிண்டாவை சந்தித்து காதல் கொண்டார். பிறகு இந்த  காதலர்கள் 1994ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். ஹவாய் தீவில் பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது. 27 ஆண்டுகள் வாழ்க்கையிலும், நிறுவனத்தில் ஒன்றாக இணைந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நாட்டுக்கு  அளித்துள்ளனர்.  இந்நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக அறிவித்துள்ளனர்.  இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இது குறித்து இருவரும் தங்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ”கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய சிறந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையை கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும்  ஆரோக்கியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாழ அது உதவியது,” என்று கூறியுள்ளனர். மேலும், ”அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆனால், வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள்  நம்பவில்லை,” என்று கேட்ஸ் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.புதிய வாழ்வை முன்னெடுக்கும் பயணத்தில் தங்களுடைய தனி வாழ்வுக்கான இடத்தை கொடுத்து அதை மதிக்குமாறும் , எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை  முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில் கேட்ஸ், மெலிண்டா தம்பதி கூறியுள்ளனர். பில்கேட்ஸுக்கு 65 வயதாகிறது. மெலிண்டாவுக்கு 56 வயதாகிறது. இருவரும் உலக அளவில் புகழ்பெற்ற பல லட்சம் கோடி சொத்துக்களை உடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பங்கு வகிக்கின்றனர். தங்கள் அறக்கட்டளை சார்பில், கொரேனா  தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை ஏழை மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு வினியோகிக்கவும் முடிவு செய்திருந்தனர். இருவரது மணவாழ்வு முறிந்தாலும் அறக்கட்டளை பணிகளில் ஒன்றாக  பணியாற்றுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை