ஜம்மு முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

தினகரன்  தினகரன்
ஜம்மு முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி:  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான ஜக்மோகன் மல்ஹோத்ரா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநராக இருந்த ஜக்மோகன், 1927ம் ஆண்டு செப்டம்பரில் 25ம் தேதி பிறந்தவராவார். இவர் ஜக்மோகன் மல்ஹோத்ரா என பிரபலமாக அறியப்பட்டவர். இவர் 1984 முதல் 1989 வரை, 1990ம் ஆண்டு ஜனவரி  முதல் மே வரை ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக பதவியில் இருந்தார். மேலும், கோவா ஆளுநராகவும் டெல்லி துணை நிலை ஆளுநராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.  இவர் 1971ம் ஆண்டு பத்ம , 1977ம் ஆண்டு பத்ம பூஷன், 2016ம் ஆண்டு  பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜம்முவில் மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில், ``ஜக்மோகன் திறமையான நிர்வாகி, அவரது மறைவு வெற்றிடத்தை விட்டு செல்கிறது,’’ என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி அவரது டிவிட்டரில், ``ஜக்மோகனின் மறைவு நாட்டிற்கு  ஈடு செய்ய முடியாத இழப்பு,’’ என்று தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  மற்றும் பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை