கொரோனா பிடியில் வீரர்கள் ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா பிடியில் வீரர்கள் ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு

மும்பை:  கொரோனா தடுப்பு பாதுகாப்பு குமிழியில் இருந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பீதி காரணமாக 2020ம் ஆண்டு ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகம்(யுஏஈ) நாடுகளில் நடத்தப்பட்டது.    ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து  நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல்  போட்டி இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான போட்டி அட்டவணையும் மார்ச் 7ம் தேதி வெளியானது. அதன்படி லீக் போட்டிகள் ஏப்.29ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் நடத்தப்பட இருந்தன.இந்நிலையில் கொரோனா பரவல் 2வது அலை வேகமெடுத்ததையடுத்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கங்களில் நடத்த முடிவானது. போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அக்சர் படேல்(டெல்லி), தேவதூத் படிக்கல்(ெபங்களூர் ) ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.  ஆனாலும் திட்டமிட்டபடி ஏப்.9ம் தேதி முதல் போட்டி சென்னையில் தொடங்கியது. மும்பையில் ஊரடங்கு அமலானப்பின்னும் போட்டிகள் பிரச்னையின்றி நடந்து முடிந்தன. இடையில் இந்தியாவில் ெகாரோனா ெதாற்று அதிகரித்து வருவதால் வெளிநாட்டு  வீரர்கள் பலரும் தொடரில் இருந்து விலக ஆரம்பித்தனர். கூடவே ஐபிஎல்  அணியினருக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யத் தொடங்கினர்.ஆனால் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. காரணம் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர்  ‘பயோ பபுள்’ எனப்படும் உயிர் பாதுகாப்பு குமிழியில் வைக்கப்பட்டிருந்தனர். தங்கும் இடம், பயிற்சி பெறும்  இடம், விளையாட்டு அரங்கம் என எல்லா இடங்களிலும் வீரர்கள் ஜிபிஆர்எஸ், டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.அதனால் வீரர்கள் வெளியிடங்களுக்கு செல்லாமல், வெளியாட்களுடன் பழகாமல்  பாதுகாப்பாக கண்காணிப்பில் இருந்தனர். ஆனாலும் அந்த  உயிர் குமிழியில் ஓட்டை விழுந்து வீரர்கள் தொற்றுக்கு ஆளாக தொடங்கினர். அகமதாபாத்தில் தங்கியிருந்த கொல்கத்தா வீரரர்களான  தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அன்று மாலை அகமதாபாத்தில்  நடைபெற வேண்டிய கொல்கத்தா-பெங்களூர் இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அன்று மாலையே டெல்லியில் தங்கியிருக்கும் சென்னை அணியின்  பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, அணியின் பயண உதவியாளர் ஆகியோருக்கு   தொற்று உறுதியானது.தொடர்ந்து நேற்று  விருத்திமான் சாகா(ஐதராபாத்), அமீத்  மிஸ்ரா(டெல்லி) ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இப்படி ஐபிஎல் அணிகளின் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதால்  ஐபிஎல் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில்,‘வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டது. மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் நடப்பு ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.நடப்புத் தொடரில் விலகிய வீரர்கள்கொரோனா அச்சத்தால்  இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டோன்(ராஜஸ்தான்), ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா(பெங்களூர்),  கேன் ரிச்சர்ட்சன்(பெங்களூர்),  ஆண்ட்ரூ டை(ராஜஸ்தான்) ஆகியோர் தொடரில் இருந்து விலகிவிட்டனர்.‘பாதுகாப்பு குமிழியில் நீண்ட நாட்கள் இருப்பது மனச்சோர்வை தருகிறது’ என்று ஆஸி வீரர்கள் ஜோஷ் ஹசல்வுட்(சென்னை),  மிட்செல் மார்ஷ்(ஐதராபாத்) ஆகியோர் போட்டிக்கு  முன்பே விலகி விட்டனர்.நடுவர்களும் விலகல்இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன், தனது தாயும், மனைவியும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கூறி தொடரில் இருந்து விலகினர். அதேபோல் ஆஸியை சேர்ந்த நடுவர் பால் ரீபில்  தனிப்பட்ட காரணங்களுக்காக  விலகுவதாக தெரிவித்தார்.நீதிமன்றங்களில் வழக்குகொரோனா பீதிக்கு இடையில் நடக்கும் ஐபிஎல் தொடரை ரத்து அல்லது தள்ளி வைக்கக் கோரி  நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், நேற்று மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.  மும்பையில் வழக்கு தொடரப்பட்ட விவரம் தெரிந்த சிறிது நேரத்தில் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.நாடு திரும்புவதில் சிக்கல்இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வர மே 15ம் தேதி வரை அந்நாட்டு அரசு  தடை விதித்துள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 14 பேர் உடனடியாக நாடு திரும்ப முடியாத  நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் பாதுகாப்பாக தங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி  பிசிசிஐயிடம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை