தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேற்குவங்க சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பிரதமர் கவலை: ஆளுநருடன் தொலைபேசியில் பேசினார்

தினகரன்  தினகரன்
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேற்குவங்க சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பிரதமர் கவலை: ஆளுநருடன் தொலைபேசியில் பேசினார்

கொல்கத்தா: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிமாக இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது மம்தா பானர்ஜியை தோற்கடிக்கவும் அக்கட்சியை  வீழ்த்தவும் பாஜ பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டது. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி மம்தா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகி திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை  கைப்பற்றிய பிறகு அக்கட்சி தொண்டர்கள் தங்கள் கோபத்தை பாஜ பக்கம் திருப்பியுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்க தொடங்கியது. பர்த்வான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வன்முறை வெடித்தது. பாஜ அலுவலகம் சூறையாடப்பட்டு, தீவைக்கப்பட்டது. இந்த மோதலில் 4 பாஜ தொண்டர்கள் உயிரிழந்தனர். 3  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்  உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை குறித்து ஆளுநர் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் கூறியதாவது:  மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குறித்து பிரதமர் மோடி கவலையும், வேதனையும் அடைந்தார்.  மேலும் சம்பவம் குறித்து உண்மை அறிக்கையை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து மம்தா  பானர்ஜிக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். மேற்கு வங்க காவல் அதிகாரிகள் இது போன்ற வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சூறையாடுதல், கொலை செய்தல், தூண்டுதல், தீவைத்தல் ஆகிய செயல்கள் ஜனநாயக நாட்டில்  அவமானகரமானது. இது போன்று நம்மாநிலத்தில் மட்டும் நடப்பது ஏன்?. இதனால் மக்கள் நிம்மதி இழந்து அச்சத்தில் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள ஓடியுள்ளனர் என்று கூறியுள்ளார். சிபிஐ விசாரணை கோரி பாஜ தலைவர் வழக்குமேற்கு வங்க பாஜ தலைவர் கவுரவ் பாட்டியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும்,பிறகும் செய்த வன்முறைகள்,  பாலியல் குற்றங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். 2018ம் ஆண்டு தான் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனு நிலுவையில் உள்ளது. அதோடு இம்மனுவை சேர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை நடந்த கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள், வன்முறைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியன  குறித்த முழுமையான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மூலக்கதை