தடுப்பூசியை வீணாக்கியதில் எடப்பாடி அரசு முதலிடம்: 8.83% விரயமானது... மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
தடுப்பூசியை வீணாக்கியதில் எடப்பாடி அரசு முதலிடம்: 8.83% விரயமானது... மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: `கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முன்னதாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 8.83 சதவீதம் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் வீணாக்கப்பட்டுள்ளது,’ என மத்திய அரசு வெளியிட்டுள்ள  புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் 2வது அலை மிகவும் மோசமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தடுப்பூசி மட்டும் தான் அதனை கட்டுப்படுத்தும் என மத்திய மாநில  அரசுகள் தொடர்ந்து நாட்டு மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதே நேரத்தில் தடுப்பூசிக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால்தான், கடந்த 1ம் தேதி தொடங்கப்பட வேண்டிய, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல மாநிலங்களில் தற்போது வரை  தொடங்கப்படவில்லை. இதுபோன்ற சூழலில் தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக அடுத்த 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 48.41 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மத்திய  சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு மட்டும் இன்று (நேற்று) 2,75,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர நாடு முழுவதும் மாநிலங்களுக்கு 16 கோடியே 68 லட்சத்து 28 ஆயிரத்து 950 தடுப்பூசிகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முன்னதாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தடுப்பூசிகளில் 8.83 சதவீதம் வீணாக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதில்,தடுப்பூசிகளை தொடர்ந்து வீணடிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருவதாகவும், நாடு முழுவதும் மாநிலங்களில் 75 லட்சத்து 24 ஆயிரத்து 903 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இதில், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 758 தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை